Holy Trinity

Holy Trinity

Friday, April 20, 2012


(ஸ்ரீ குலசேகர ஆழ்வார், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்)

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 40


யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ கவிலோக வீரௌ
மித்ரே த்விஜன்ம வர பாரஸவா வபூதாம்  /
தேநாம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட்பதேன
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண  //

தாமரை  இதழ்களைப்  போன்ற  கண்களையுடைய  எம்பெருமானான  ஸ்ரீ  க்ருஷ்ணனின்  திருவடித்  தாமரைகளின்  மீது  ஆழ்ந்த  பக்தி  பூண்ட  எந்த  குலசேகர  மன்னனுக்கு  கேள்வி  ஞானமுள்ளவர்களாகவும்,  சிறந்த  கவிகளாகவும்,  பெரும்  வீரர்களாகவும்,  அந்தண  மற்றும்  மிஸ்ர  குலத்தில்  பிறந்தவர்களான  ப்ரிய  நண்பர்கள்  இருவர்  இருந்தார்களோ,  அந்த  குலசேகர  மன்னனால்  இந்த  'முகுந்த மாலா'  ஸ்தோத்திரம்  இயற்றப்பட்டது. 


(இது  இந்த  ஸ்தோத்திரத்தின்  கடைசி  ஸ்லோகமாகும்.  இந்த  ஸ்லோகத்தின்  மூலம்  'முகுந்த  மாலா'  ஸ்தோத்திரம்  ஸ்ரீ  குலசேகர  மன்னனால்  இயற்றப்பட்டது  என்று  தெளிவு  படக்  கூறுகிறார். 

"மனமே..!! தன்னைவிட மேன்மை உடையவர் எவரும் இல்லை என்னும் படியும்; தன்னைவிட உயர்ந்த நலன்களை உடையவர் எவரும் இல்லை என்னும் படியும் உள்ளவர் எவரோ, அஞ்ஞானம் நீங்கப் பெற்ற தெளிந்த அறிவினை அருளும் வல்லமை உடையவர் எவரோ, தளர்விலா தேவர்களின் தலைவராக உள்ளவர் எவரோ, அத்தகைய பராக்ரமம் உடையவரின் ஒளி பொருந்தியதும், சரணடைந்த பக்தர்களின் துன்பத்தைப் போக்குவதுமான திருவடித் தாமரைகளை நாள்தோறும் பக்தியுடன் பணிந்து, அறியாமை என்னும் இருளிலிருந்து மீண்டு எழுவாயாக..!!" [திருவாய் மொழி 1-1-1 ] 

இந்த 'முகுந்த மாலை'யினை யாரெல்லாம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் இக பர சுகங்களை அளிப்பவனான ஸ்ரீ முகுந்தனின் அருளால் விஷ்ணு பக்தியும், அனைத்து செல்வங்களும் பெற்று இன்புறுவர் என்று கூறி இத்துடன் என் சிறிய உரையையும் முடிக்கிறேன். மேலும், இந்த அரிய ஸ்தோத்திரத்தை அடியேன் மேற்கொள்ளக் காரணமாய் இருந்த நண்பர்களுக்கு அடியேனுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவன் அருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் முடியும் என்பதனால், கண்ணன் கழலிணையே பற்றி, அவன் கருணா கடாக்ஷத்தையே வேண்டுகிறேன்.  அடியேனுடைய மொழிப் பெயர்ப்பில் இருக்கும் நிறைகளைக் கொண்டாட அடியேனுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதிலுள்ள தவறுகளுக்கு நானே முழு பொறுப்பு. ஏதேனும் குற்றம் குறை இருப்பின் அன்பர்கள் கருணை கூர்ந்து சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள அடியேன் சித்தமாயிருக்கிறேன். )


ஸ்ரீ ராமகிருஷ்ண திருவடிகளே சரணம்....!!!

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //

ஸ்லோகம் - 39 

க்ஷீர ஸாகர தரங்க ஸீகராஸார தாரகித சாரு மூர்த்தயே /
போகி போக ஸயநீய ஸாயிநே மாதவாய மதுவித்விஷே நம: //

மது  என்னும்  அசுரனை  அழித்த,  நீல  மேக  ஷ்யாமள  வர்ணனான  ஸ்ரீமந்  நாராயணன்,  திருப்பாற்கடலில்  ஆதிசேஷனாகிய  பாம்பணையில்  பள்ளிகொண்டிருக்கிறார்...!! 

 பாற்கடலின்  அலைகளால்  சிதறிய  துளிகள்  அழகிய  மணவாளனின்  திருமேனியில்  பட்டு,  நீல  வானில்  பளிச்சிடும்  நக்ஷத்திரங்களைப்  போல  பிரகாசிக்கின்றன...!!  

இந்த  மாதவனாகிய  லக்ஷ்மிபதிக்கு  என்  நமஸ்காரங்கள்...!!


("இருளானது  விலகி  நீங்கும்படியாக,  ஒளிவீசும்  மாணிக்க  மணிகள்  விளங்குகின்ற  நெற்றியையும்,  அழகான  புள்ளிகளையும்,  அழகான  ஆயிரம்  படங்களையும்  உடைய  ஆதிசேஷன்  என்னும்  பாம்பணையின்  மேல்  பள்ளி  கொண்டிருக்கிறான்  அழகிய  மணவாளன்  என்றும்,  பெரிய  பெருமாள்  என்றும்  போற்றப்படும்  திரு அரங்கநாதன்..!!  அவன்  எழுந்தருளியுள்ள  திருவரங்கமாகிய  திவ்ய  தேசத்தில்,  பொன்னி  என்று  பெயர்  படைத்த  காவிரிப் பெண்  தன்னுடைய  அலைக்கரங்களால்,  அப்பெருமானின்  திருவடிகளை  இதமாக  வருடுகின்றாள்..!!  இதனால்,  மிக்க  மகிழ்ச்சியடைந்து  பள்ளிகொண்டிருக்கும்  கருமணியை,  கோமளத்தை,  என்  கண்ணாரக்  கண்டு  களிப்பெய்தும்  நாள்  எந்த  நாளோ..?",  என்று  தன்  பெருமாள்  திருமொழிப்  பாசுரத்தில்  ஏங்குகிறார்  குலசேகரர்.) 

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 38

த்யாயந்தியே விஷ்ணுமனந்தமவ்யயம்
ஹ்ருத்பத்மமத்யே ஸததம் வ்யவஸ்திதம்  /
சமாஹிதாநாம்    ஸததாபயப்ரதம்      
தேயாந்தி ஸித்திம் பரமாஞ்ச வைஷ்ணவீம்  //



பகவான்  ஸ்ரீ  விஷ்ணு  முடிவில்லாதவர்...!   
 
எப்பொழுதும்  என்  இதயத்  தாமரையில்  நிலைத்திருப்பவர்...!    

புலன்களை  அடக்கிய  தன்  அடியார்களுக்கு  அபாயம்  அளிப்பவர்...!    

இவ்வாறான  பெருமைகளை  உடைய   ஸ்ரீமந்  நாராயணனை  தியானிப்பவர்கள்   மிகவும்   மேலானதான  ஸ்ரீ வைகுண்ட  லோகத்தினை  அடைவார்கள்...! 


( இறைவன் எல்லா உயிர்களிலும் நிறைந்துள்ளார். இதையே, பகவத் கீதையில்  ஸ்ரீ கிருஷ்ணர், 

"ஈஸ்வர  சர்வ  பூதானாம்  ஹ்ருத்தேசேர்ஜன  திஷ்டதி"  (கீதை-18.61) , 
"அர்ஜுனா..!  இறைவன்  அனைத்து  உயிர்களின்  இதயத்திலும்  இருக்கிறார்",  என்று  கூறுகிறார்.  மேலும், 

"தமேவ  சரணம்  கச்ச  ஸர்வ  பாவேன  பாரத  
தத்  ப்ரஸாதாத்  பராம்சாந்திம்  ஸ்தானம்  ப்ராப்ஸ்யஸி  சாஸ்வதம்"
(கீதை-18.62) 

"அர்ஜுனா,  இவ்வுலக  ஆசைகளைத்  துறந்து,  இறைவனையே  தியானித்து,  எல்லா  விதத்திலும்  அவனையே  சரணடைபவர்கள்,  அவனது  அருளால்  மேலான  அமைதியையும்  அழிவில்லாத  நிலையையும்  அடைவார்கள்",  என்று  உரைக்கிறார்.  மேலும், 

" மன்மனா  பவ  மத்  பக்தோ  மத்யாஜீ  மாம்  நமஸ்குரூ 
மாமேவைஷ்யசி  ஸத்யம்  தே  ப்ரதிஜானே  ப்ரியோஸி  மே"   (கீதை-18.65)
" என்னிடம்  உன்  மனத்தினை  வைத்திரு,  என்னுடைய  பக்தனாக  என்றும்  இரு,  என்னை  என்றும்  வழிபடு,  என்னையே  அடைவாய்.  உனக்கு  சத்தியம்  செய்து  உறுதி  கூறுகிறேன்.  நீ  எனக்கு  பிரியமானவன்",  என்று  சத்தியப்  பிரமாணமாக  இதனை  ஸ்ரீ கிருஷ்ணர்  கூறுகிறார். 

எனவே,  நாம்  செய்ய  வேண்டியது  என்னவென்றால்,  உலகத்தில்  எதனிலும்  பற்றில்லாமல்,  தாமரை  இலை  மேல்  நீர்த்துளி  போல  வாழ்ந்து,  பலன்களை  எதிர்பாராமல்  கடமையைச்  செய்து,  மன  உறுதியுடனும்,  நம்பிக்கையுடனும்,  இறைவனை  நம்  செயல்களின்  மூலமாக  வழிபட்டு,  பக்தியுடன்  அவனை  வணங்கினால்,  நாம்  அவனை  அடைவது  உறுதி. 

இறைவனுடைய  வாக்கு  என்றும்  பொய்யாவதில்லை..!  திரௌபதியிடம்  ஸ்ரீ கிருஷ்ணர்,  "ஹே  திரௌபதி,  ஆகாயம்  இடிந்து  கீழே  விழலாம்;  பூமி  தூள்  தூளாகலாம்;  இமய  மலை  பொடிப்  பொடியாகலாம்;  ஆனால்,  என்  வார்த்தை  என்றும்  வீணாகாது",  என்று  கூறுகிறார். 

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 36

ஸ்ரீ நாத நாராயண வாஸுதேவ
ஸ்ரீ க்ருஷ்ண பக்தப்ரிய சக்ரபாணே  /
ஸ்ரீ பத்மநாபாச்யுத கைடபாரே
ஸ்ரீ ராம பத்மாக்ஷ ஹரே முராரே  //


ஸ்லோகம் - 37

அனந்த வைகுண்ட முகுந்த க்ருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி  /
வக்தும் ஸமர்த்தோபி ந வக்தி கஸ்சித்
அஹோ ஜநாநாம் வ்யஸநாபி முக்யம்  //

(மேலே  கண்ட  இரு  ஸ்லோகங்களாலும்  பகவானுடைய  பற்பல  நாமங்களை  கூறுகிறார்  ஸ்ரீ  குலசேகர  ஆழ்வார்.)


ஸ்ரீ நாதா  (மஹா லக்ஷ்மியின் மணாளன்),  நாராயணன்  (அனைத்து  ஜீவராசிகளுக்கும்  புகலிடமாக  விளங்குபவன்),  வாசுதேவன்  (வசுதேவரின்  புதல்வனாக  தோன்றிய  கண்ணன்),  ஸ்ரீ கிருஷ்ணன்,  பக்தப்ரியன்  (தன் பக்தர்களிடம் மிகுந்த அருளைப் பொழிபவன்),  சக்ரபாணி  (சுதர்சன சக்கரத்தை ஏந்தியவன்),  ஸ்ரீ பத்மநாபன் (நாபிக் கமலத்தில்  தாமரை  மலரை  உடையவன்),  அச்சுதன்  (அழிவில்லாதவன்),  கைடபாரி  (கைடபன்  என்ற  அசுரனைக்  கொன்றவன்),  ஸ்ரீ ராமன்,  பத்மாக்ஷன்  (தாமரை  இதழைப்  போன்ற  அழகிய  கண்களை  உடையவன்),  ஹரி  (நம்  பாவங்களை  அழிப்பவன்;  சம்சாரமாகிய  துன்பத்தைப்  போக்குபவன்),  முராரி  (முரன்  என்ற  அசுரனை  சம்ஹரித்தவன்)..!!!

அனந்தா  (முடிவில்லாதவன்),  வைகுந்தா  (வைகுந்தத்தின் தலைவன்),   முகுந்தா  (முக்தியை  அருளுபவன்),  கிருஷ்ணா,  கோவிந்தா  (பசுக்களைக் (அ) ஜீவர்களை ரக்ஷிப்பவன்),  தாமோதரா  (தன்  தாய்  யசோதையால்  தாம்புக்  கையிற்றால்  வயிற்றில்  கட்டப்பட்டதால்  உண்டான  தழும்பை  உடையவன்),  மாதவா  (திருமகள் நாதன்)  இவ்வாறு  பகவானுடைய   பல்வேறு  திவ்ய  மங்கள  நாமங்களைக்  கூறும்  திறமை  இருந்தும்,  மக்கள் அனைவரும்  இவ்வுலக  சிற்றின்பங்களிலும்,  பந்தங்களிலும்  சிக்கித்  தவிக்கின்றார்களே...!!!   இது  மிகுந்த  வியப்பாக  உள்ளதே..!!!

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 35 


நமாமி  நாராயண  பாத  பங்கஜம் 
கரோமி  நாராயண  பூஜனம்  ஸதா       /
வதாமி  நாராயண  நாம  நிர்மலம் 
ஸ்மராமி நாராயண தத்வமவ்யயம்     //



நான் சதா சர்வ காலமும் ஸ்ரீமாந் நாராயணனின் திருவடித் தாமரைகளையே வணங்குகிறேன்...! 

நான் எப்பொழுதும் அவனையே பூஜிக்கிறேன்...!  

நான் எப்பொழுதும் அவனுடைய குறை எதுமில்லாத அவனுடைய நாமமான 'ஸ்ரீமந்  நாராயண' என்பதையே ஜபிக்கிறேன்...! 

நான் என்றென்றும் 'நாராயண' என்ற தத்துவப் பொருளையே சிந்திக்கிறேன்...!

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த



//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 34 

தத்த்வம்  ப்ரஸீத  பகவந்  குரு  மைய்யநாதே
விஷ்ணோ  க்ருபாம்  பரமகாருணிக:  கில த்வம் /
சம்ஸார  ஸாகர  நிமக்நம்  அனந்த  தீனம்  
உத்தர்த்துமர்ஹஸி  ஹரே  புருஷோத்தமோஸி // 


ஹே  பகவானே...!   

ஸ்ரீ  விஷ்ணுவாகிய  எம்பெருமானே...!


ஆதி  அந்தம்  இல்லாத  ஹரியே...!   

நீயே  புருஷோத்தமன்...!

நீயே  கருணையுள்ளம்  படைத்த  பரம  காருணிகனாக  
விளங்குபவன்...!


நீ  எனக்கு  அருள்  புரிய  வேண்டும்...!   

கரை  ஏற  வழியில்லாமல்  பிறவிப்  பெருங்கடலில்  மூழ்கித்  தத்தளித்துக்  கொண்டிருக்கும்  தீனனான  என்னை   நீ தான்  கரையேற்ற  வேண்டும்...!  

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த


// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 33

க்ருஷ்ணோ ரக்ஷது நோ ஜகத்த்ரய குரு: க்ருஷ்ணம் நமஸ்யாம்யஹம்
க்ருஷ்ணே நாமர ஸத்ரவோ விநிஹதா: க்ருஷ்ணாய துப்யம் நம: /
க்ருஷ்ணாதேவ ஸமுத்திதம் ஜகதிதம் க்ருஷ்ணஸ்ய தாஸோஸ்ம்யஹம்
க்ருஷ்ணே திஷ்டதி ஸர்வமேததகிலம் ஹே க்ருஷ்ண ரக்ஷஸ்வமாம் //



கிருஷ்ணன் மூன்று  லோகங்களுக்கும்  நாயகனான  இருந்து நம்மையெல்லாம்  காக்கிறான்...! 


கிருஷ்ணனை  நான்  நமஸ்கரிக்கிறேன்...! 

கிருஷ்ணனால்  தேவர்களுடைய  பகைவர்களான  அனைத்து  அசுரர்களும்  அழிக்கப்பட்டனர்...! 

கிருஷ்ணனிடம்  இருந்தே  இந்த  பூவுலகம்  தோன்றியது...! 

கிருஷ்ணனின்  தாசனாக  நான்  என்றும் இருப்பேன்...! 

கிருஷ்ணனிடத்தில்  அனைத்தும்  நிலை  பெற்றிருக்கிறது...! 

ஹே  கிருஷ்ணா...!  என்னை  ரக்ஷிப்பாயாக...! 


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 32

தாரா வாராகர வரஸுதா தே தநூஜோ விரிஞ்சி:
ஸ்தோதா வேதஸ் தவ ஸுரகணோ ப்ருத்யவர்க்க: ப்ரஸாத: /
முக்திர் மாயா ஜகதவிகலம் தாவகீ தேவகி தே
மாதா மித்ரம் வலரிபுஸுதஸ் த்வய்யதேந்யந்ந ஜாநே //

என் இறைவா..!

உன் மனைவி கடலரசன் மகளான ஸ்ரீ மஹா லக்ஷ்மி...! 

உன் மகன் நான்முகனான பிரம்மன்...!

உன் புகழ் பாடுவதோ வேதங்கள்...!

உன் பணியாளர்களே தேவர்கள்...!

உன் அனுக்ரஹத்தினால் கிடைப்பதே மோக்ஷம்...!

உன் மாயையே  இந்த உலகம்...!

உன் தாய் தேவகி...!

உன் நண்பன் இந்திரன் மகனான அர்ஜுனன்...!

இவைகளைத் தவிர உன்னைப் பற்றி நான் வேறொன்றையும் 
அறியேன்...! 


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 31

இதம்  ஸரீரம்  பரிணாம  பேஸலம்  பதத்ய  வஸ்யம்  ஸ்லத  ஸந்தி  ஜர்ஜரம்   /
கிமௌஷதை: க்லிஸ்யதி  மூடதுர்மதே  நிராமயம்  க்ருஷ்ண ரஸாயநம்  பிப //

ஹே மூடனே...! துர் மதியே...!

இந்த  உடலானது  முதுமையினால்  வாடி  இளைத்து,  பூட்டுக்கள்  எல்லாம்  தளர்ந்து  ஒருநாள்  அழியப்  போவது  நிச்சயம்...!   இதை  யாராலும்  தவிர்க்கவோ,  தடுக்கவோ  முடியாது...!   அதனால்,  இந்த  அழியப்  போகும்  உடலைப்  பேணுவதற்காக  பற்பல  மருந்துகளையெல்லாம்  அருந்த  வேண்டாம்.  மிகவும்  உயர்ந்த  மருந்தான  'ஸ்ரீ க்ருஷ்ண'  நாமத்தை  அருந்தினாலே  போதுமானது...! 

Wednesday, April 11, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 30

தத்த்வம்  ப்ருவாணாநி  பரம்  பரஸ்மாத்
மது  க்ஷரந்தீவ  ஸதாம்  பலாநி   /
ப்ராவர்த்தய  ப்ராஞ்ஜலிரஸ்மி  ஜிஹ்வே
நாமாநி  நாராயண கோசாராணி //

ஹே  நாக்கே...!

நான்  உன்னை  வணங்கிக்  கேட்டுக்  கொள்கிறேன்...!   

ஸ்ரீமந்  நாராயணனின்  திவ்ய  நாமங்களையே  என்றென்றும்  உச்சரித்துக்  கொண்டிருப்பாயாக...!   

அவனுடைய  நாமங்கள்  அனைத்தும்,  உயர்ந்தனவற்றுள்  மிக  உயந்ததான,  மேலான  உண்மைப்  பொருளைப்  பற்றி  கூறுகின்றன...! 

அந்  நாமங்கள்  தேன் அருவியைப்  போன்றவை...!   

உயர்ந்தோர்களும்,  நல்லோர்களும்  விரும்பும்  பலன்களும்  அந்  நாமங்களே...!  


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 29

மதன  பரிஹர  ஸ்திதிம்  மதியே  மனஸி  முகுந்த  பாதாரவிந்த  தாம்நி /
ஹரநயன க்ருஷாநுனா க்ருஷோஸி ஸ்மரஸி ந சக்ர பராக்ரமம் முராரே://  


மன்மதனே...!  என்  இறைவனாகிய  முகுந்தனின்  திருவடித்  தாமரைகள்  என்றென்றும்  இருக்குமிடமான  என்னுடைய  இதயத்தில்  நீ  இருக்கும்   எண்ணத்தை  அடியோடு  விட்டு  விடு...!   இதற்கு  முன்னரே  சிவ  பெருமானுடைய  கோபத்திற்கு  காரணமாகி,  அவருடைய  நெற்றிக் கண்ணின்  தீ  ஜ்வாலைகளால்  எரிக்கப்பட்டு  அழிந்திருக்கிறாய்...!  என் முராரியின்  (நாராயணனின்)  சுதர்ஸன  சக்கரத்தின்  பராக்ரமத்தை  மறந்து  விட்டாயா...? 


(முரன் என்ற அசுரனை கிருஷ்ணர் அழித்ததால் அவருக்கு முராரி என்ற திருநாமம்)

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 28 


நாதே  ந:  புருஷோத்தமே  த்ரிஜகதாமேகாதிபே  சேதஸா 
ஸேவ்யே  ஸ்வஸ்ய  பதஸ்ய  தாதரிஸுரே  நாராயணே  திஷ்டதி /
யம்  கஞ்சித்  புருஷாதமம்  கதிபயக்ராமேஸமல்பார்த்ததம்
சேவாயை   ம்ருகயாமஹே   நரமஹோ   மூகா   வராகா   வயம்   // 



புருஷோத்தமனான  ஸ்ரீமந்  நாராயணன்  மூவுலகுக்கும்  தலைவன்  ஆவான்...!   நம்  மனத்தினால்  அவனுக்கு  பக்தி  செய்தால்,  அது  ஒன்றே  போதுமானது;  தன்  இருப்பிடத்தையே  நமக்கு  கொடுத்து  விடுவான்...!  இப்படிப்பட்ட  தீன  ரக்ஷகனாக  எம்பெருமான்  நமக்காக  இருக்கும் போது  அல்பத்தனமான , சாதாரணமான  மனிதர்களை  துதி  செய்து,  சேவகம்  பார்த்துக்  கொண்டிருக்கிறோமே...!  நாம்  தான்  எவ்வளவு  மூடர்கள்...!  அற்பமானவர்கள்...! 

Thursday, March 29, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 27

மஜ்ஜந்மந:  பலமிதம்  மதுகைட  பாரே 
  மத்  ப்ரார்த்தநீய  மதநுக்ரஹ  ஏஷ  ஏவ /
த்வத்  ப்ருத்ய  ப்ருத்ய  பரிசாரக  ப்ருத்ய  ப்ருத்ய 
 ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோகநாத  //


மது,  கைடபன்  போன்ற  பயங்கர  அசுரர்களை  ஸம்ஹரித்தவனே...!  

அனைத்து  உலகங்களுக்கும்  தலைவனாக  விளங்கும்  இறைவா...! 
  
நான்  இந்த  ஜன்மம்  எடுத்ததற்கு  பலன்  உண்டாகில்  இது  ஒன்று  தான்...! 
 
நான்  உன்னிடம்  பிரார்த்தித்து,  நீ  எனக்கு  அருள  வேண்டியதும்  இது  ஒன்று  தான்...!  

பகவானே, உன்னுடைய  அடியார்க்கு  அடியார்,  அவர்க்கு  அடியார்  என்ற  வரிசையில்,  ஏழாவது  படியில்  இருக்கும்  ஒரு  சாதாரண  தொண்டனாக  என்னை   நீ   நினைத்துக்  கொள்ள  வேண்டும்...! 


[இக்கலியுகத்தில்,  நாம்  நேராக  இறைவனைப்  பற்றிக்கொள்வது  என்பது  மிகவும்  கடினமான  ஒன்றாகும்.  ஆனால்,  அவரது  அடியார்களான  பக்தர்களுக்கு  சேவை  செய்து,  இறைவனின்  அருளுக்கு  பாத்திரம்  ஆவது,  மிகவும்  மேலான  ஒன்றாகும்.  'அஹம்  பக்த  பராதீன',  'நான்  என்  பக்தர்களுக்கு  கட்டுண்டவன்',  என  பகவானே  'அம்பரீஷ  சரித்திரத்தில்'  திருவாய்  மலர்ந்தருளியுள்ளார்...!  விப்ர நாராயணர்  (தொண்டரடிப் பொடி ஆழ்வார்)  என்ற  மஹா  புருஷரே,  தன்னைப்   பகவானுடைய   தொண்டர்களின்  பாத  தூளியாகக்  கருதினார்...!

உண்மை  பக்தன்  எப்படி  இருப்பான்..?  அவனுடைய  குணங்கள்  யாவை..? 

'எங்கும்  நீக்கமற  நிறைந்தவரும்,  சர்வ  வல்லமை  படைத்தவரும்,  அந்தர்யாமியுமாய்  இருப்பவருமான  பகவானுடைய  திவ்ய  மங்கள  அவதாரங்களிலும்,  அவன்  அவதார  நிகழ்வுகளிலும்,  அவன்  லீலா  விநோதங்களிலும்,  அவன்  திருவாய்  மலர்ந்தருளிய  சொற்களிலும்,  கீதாசார்யனாக  அவன்  அருளிய  உபதேசங்களிலும்,  அவனுடைய  கல்யாண  குணங்களிலும்,  திவ்ய ப்ரபாவங்களிலும்,  எவன்  ஒருவன்  சிறிதும்  சந்தேகமின்றி  நம்பிக்கை  கொள்கிறானோ,  மற்றும்  இவற்றையெல்லாம்  தன்  மனக்  கண்களால்  பார்த்துப்  பார்த்துப்  பூரித்து  மகிழ்கிறானோ,  அவனே  உண்மை  'பக்தன்'  ஆவான்'. 

'அந்த  பக்தனானவன்,  அஹங்காரம் (நான்),  மமகாரம் (எனது),  விருப்பு-வெறுப்பு,  மகிழ்ச்சி-துயரம்,  காமம்-குரோதம்,  லாபம்-நஷ்டம்,  வெற்றி-தோல்வி,  புகழ்ச்சி-இகழ்ச்சி  போன்றவற்றில்  அகப்பட்டுக்  கொள்ளாமல்  ஒதுங்கி,  ஸம பாவனையும்,  நாவடக்கமும்,  மன சாந்தியும்  கொண்டவனாய்,  சத் சங்கம்  மற்றும்  ஜீவர்களிடத்தில்  கருணையும்,  பக்தர்களிடத்தில்  நட்புறவும்  உடையவனாய்  இருப்பான்'.   

அந்த  பக்தன்,  பகவானிடத்தில்  பரமப்  பிரேமை  (காதல்) கொண்டு,  பரம  காருண்யனாக  விளங்கும்  அவன்  ஒருவனே  தனக்கு  கதி,  உயர்ந்த  புகலிடம்,  தன்  உயிருக்கு  ஆதாரம்,  அனைத்தும்  அவனே  என்று  உறுதி  கொண்டு ,  அந்த  பகவானிடத்தில்  தன்  பொறுப்பை  ஒப்படைத்து,  அவன்  தனக்கு  விதித்ததை  மன  மகிழ்ச்சியுடன்,  சலனமில்லாமல்,  ஒரு  மனதுடன்  ஏற்றுக் கொள்கிறான்.  அவனே  'சரணாகதன்'  ஆவான்.   இவர்களையே,  பகவான்  ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில்  'எனக்கு  மிகவும்  பிரியமான  பக்தர்கள்'  என்று  கூறுகிறார். 

பகவான்  கூறியவற்றுள்  (மேலே கூறியபடி)  ஒரு  சிறிதேனும்  நம்  வாழ்க்கையில்  கடைபிடித்தால்  மட்டுமே  கடைத்தேற  முடியும். 

வெறும்  'சரணாகதி - சரணாகதி'  என்றும்,  'எல்லாம் இறைவன் விட்ட வழி'  என்றும்  வாயால்  கூறிக்கொண்டு,  வெளி வேஷத்துடன்,  தன்  உதட்டளவில் மந்திரமும்,  மனம்  முழுதும்  அப்பிக் கிடக்கும்  அழுக்குடன்  திரிவதால்  எவ்விதப்  பயனும்  ஏற்பட்டு  விடாது.  இதனால்  தான்,  'உள்  ஒன்று  வைத்துப்  புறம்  ஒன்று  பேசுவார்  உறவு  கலவாமை  வேண்டும்',  என்று பெரியவர்கள்  சொல்லி  வைத்துப்  போனார்கள்.  இவர்களைப்  போன்றவர்களுக்கு,  வெளியே  ஒரு  சிறிது  மரியாதையும்,  முன்னுரிமையும்  கிடக்கலாமே  ஒழிய,  பெரிதாக  ஒன்றும்  ஏற்பட்டு  விடாது.  இவ்வாறு  தன்னையும்,  பிறரையும்  ஏமாற்றிக்கொண்டு  திரிவதால்,  இவர்கள்  மேலும்  மேலும்  பாவங்களையே  சம்பாதித்துக்  கொள்கின்றனர்.  இவர்கள்  மீளா  துயர்  தரும்  நரகங்களில்  அகப்பட்டு,  மேன்மேலும்  பிறவிப்  பெருந் தளையில்  சிக்குண்டு  துக்கப்படுவதைத்   தவிர வேறு  வழியில்லை...!! ] 

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 26


ஸ்ரீ மந்   நாம   ப்ரோச்ய   நாராயணாக்யம்  
கே    ந   ப்ராபுர்  வாஞ்சிதம்  பாபிநோபி   /
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேந  ப்ராப்தம்  கர்ப  வாஸாதி  துக்கம்  // 


'ஸ்ரீ'  என்ற  மகா லக்ஷ்மியுடன்  கூடியதான  'ஸ்ரீ மந்  நாராயணா'  என்னும்  திவ்யமான  திரு  நாமத்தை  உச்சரித்து,  எவர்  தான்  பயன்  பெறவில்லை..?   

பெரும்  பாவியும்  கூட  தான்  விரும்பிய  பலன்களைப்  பெற்றிருக்கிறான்...!  

என்  முந்தைய  பிறவிகளிலேயே    பகவானின்  அந்த  திவ்ய  நாமத்தைச்  சொல்ல  வேண்டுமென்று   எனக்குத்  தோன்றவில்லையே..!    

 ஐயோ..!    அந்த  காரணத்தால்  தான்  எனக்கு  கர்ப்ப  வாஸம்  போன்ற  துக்கமெல்லாம்  வந்து விட்டது...!  

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 25


ஆம்நாயா  ப்யஸநாந்யண்ய  ருதிதம்  வேத  வ்ரதாந்  யந்வஹம்
மேதஸ்   சேத   பலாநி    பூர்த்த    விதய:    ஸர்வே    ஹுதம்    பஸ்மநி      /
தீர்த்தாநாம்  அவ   காஹநாநி   ச   கஜஸ்நாநம்  விநா  யத்   பத   -
த்வந்த்வாம்போருக ஸம்ஸ்ம்ருதீர்  விஜயதே தேவஸ் ஸ  நாராயண:  // 



பகவான்  வெற்றி  கொள்வாராக..!   

இறைவனின்  பாத  கமலங்களை  ஒரு  சிறிதேனும்  மனத்தால்  சிந்தனை  செய்யாமல்,  வேத  சாஸ்திரங்களைக்  கற்பது  என்பது,  காட்டிற்குள்  சென்று  தனியாக  புலம்புவதற்கு  சமமாகும்...!  

வைதீக  விரதங்களைக்   கடைபிடிப்பது  என்பது,  உடம்பிலுள்ள  அதிகப்படியான  கொழுப்பைக்  கரைப்பதற்கு  மட்டுமே  உபயோகப்படும்...!  

தரும  காரியங்களான  கிணறு  தோண்டுதல்,  குளம்  வெட்டுதல்  போன்றவை,  நெருப்பிலாமல்  வெறும்  சாம்பலில்  செய்த  ஹோமத்திற்கு  ஒப்பாகும்...! 

கங்கை  போன்ற  புண்ய  தீர்த்தங்களில்  ஸ்நானம்  செய்வது  என்பது,  ஒரு  யானையைக்  குளிக்கச்  செய்வதற்கு  சமமாகும்...!   

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 24 


வ்யாமோஹ ப்ரஸமௌஷதம் முநிமநோவ்ருத்தி ப்ரவ்ருத்யௌஷதம்
தைத்யேந்த்ரார்த்திக ரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநைகௌஷதம் /
பக்த்யாத்  யந்த  ஹிதௌஷதம்   பவ  பய   ப்ரத்வம்ஸ  நைகௌஷதம் 
ஸ்ரேயப்ராப்திக  ரௌஷதம்  பிப  மந:  ஸ்ரீ  க்ருஷ்ண  திவ்யௌஷதம்  //



ஹே  மனமே...!

'ஸ்ரீ  கிருஷ்ணன்'  என்ற  ஔஷதத்தைப்  (மருந்தை)  அருந்துவாயாக...! 

அந்த  ஔஷதம்  மன  மயக்கங்களைப்  போக்க  வல்லது...! 

ரிஷி  முனிவர்களின்  மனத்தை  எப்போதும்  இறைவனிடமே  ஒன்றி  வைத்திருக்கக்  கூடியது...! 

அசுரர்களுக்கு  பெரும்  இன்னல்களைத்  தரக்கூடியது...!  

மூவுலகங்களுக்கும்  நன்மை  பயப்பது...!  

பக்தர்களுக்கு  அளவிலா  இதத்தைத்  தருவது...! 

'சம்சாரம்'  (பிறவிப் பிணி)  என்ற  கஷ்டத்தை  நீக்குவது...!  

நல்லன  எல்லாவற்றையும்  அளிப்பது...!

Tuesday, March 27, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //



ஸ்லோகம் - 23
ஸத்ருச்  சேதைக  மந்த்ரம்  ஸகலமுபநிஷத்  வாக்ய  ஸம்பூஜ்ய  மந்த்ரம்  
ஸம்ஸாரோத்தார   மந்த்ரம்   ஸமுபசிதஸ்   ஸங்க   நிர்யாண  மந்த்ரம்    //
ஸர்வைஸ்வர்யைக மந்த்ரம் வ்யஸநபுஜக ஸந்தஷ்ட ஸந்த்ராண மந்த்ரம்
ஜிஹ்வே  ஸ்ரீ க்ருஷ்ண  மந்த்ரம் ஜபஜப  ஸததம்  ஜந்ம  ஸாபல்ய மந்த்ரம் //

ஹே நாக்கே...!


ஸ்ரீ க்ருஷ்ண மந்திரத்தையே எப்போதும் ஜபித்துக்கொண்டே இரு...!  என்னென்றால்;


அந்த மந்திரம் நம்முடைய பகைவர்களை ஒழிக்கிறது...! 


உபநிஷத்துக்கள் அனைத்தும் இந்த மந்திரத்தையே போற்றுகின்றன...!  


இம்மந்திரம் நம்மை இந்தப்  பிறவியாகிய பெருங்கடலை சுலபமாக தாண்ட வைக்கிறது...! 


நாம் சிக்கித் தவிக்கும்  அக்ஞானமாகிய மாய இருளை இம்மந்திரம் அகற்றுகிறது...! 


இது நமக்கு அனைத்து செல்வங்களையும் அடைவிக்கிறது...!  


இந்த மந்திரம் பற்பல துன்பங்களாகிய பாம்புகளால் கடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுகிறது..! 


நாம் எடுத்த இப்பிறவியின் பயனை இம்மந்திரம் நமக்கு அருள்கிறது...!



(இந்த  ஸ்லோகத்தின்  மூலம்  இறைவனின்  நாம  மகிமையை  எடுத்துரைக்கிறார்  குலசேகரர்.  நாம  ஜபத்தின்  மகிமைகளை  பற்பல  பெரியோர்கள்  எடுத்துரைத்துள்ளனர். 


திருமங்கை ஆழ்வாரும்  தன்  'பெரிய  திருமொழியில்' (1-1-9) 


"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் 
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் 
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற 
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமம்..! "

" நாராயணா  என்ற  திருநாமத்தின்  மகிமையே  மகிமை..!   அது என்னவெல்லாம்  செய்யும்  தெரியுமா ?  தன்னை  வணங்குபவர்க்கு   உயர்ந்த  கதியைத்  தரும்;  பெரும்  செல்வத்தைக்  கொடுக்கும்;  தன்  அடியவர்களின்  துன்பங்களை  ஒன்றுமில்லாமல்  செய்து  விடும்;  மேலான  பரமபதத்தை  அளிக்கும்;  நாம்  எடுத்த  காரியங்களில்  வெற்றியையே  கொடுக்கும்;  நாம்  விரும்பும்  நன்மைகளைத்  தரும்;  பெற்றெடுத்த  தாயை   விட,  நமக்கு  நல்லதையே  செய்யும்;  இவ்வாறான,  நன்மைகளையே  தரும்  'நாராயணா'  என்னும்  திருமந்திரத்தை  நான்  இன்று  கண்டு கொண்டேன்.! ", என்று  கூறுகிறார்.

ஸ்ரீமத்  பாகவத  மஹா  புராணத்தில்,  பகவான்  ஸ்ரீமந்  நாராயணன்  தேவரிஷியான  நாரதரிடம், 
 "யத்ர  காயந்தி  மத்  பக்தோ  தத்ர  திஷ்டாமி", 
 "என்னுடைய  பக்தர்கள்  எங்கு  என்   நாம  சந்கீர்த்தனத்தைப்  பாடுகிறார்களோ,  அங்கு  நான்  இருக்கிறேன்",  
என்று  கூறுகிறார். 


மற்றொரு  ஸ்லோகமும்  பகவானின்  நாம  மகிமையினைப்  பற்றிக்  கூறுகிறது. 
"ஹரேர்  நாம  ஹரேர்  நாம  ஹரேர்  நாமைவ  கேவலம் - கலௌ 
 நாஸ்த்யேவ  நாஸ்த்யேவ  நாஸ்த்யேவ  கதிர்  அன்யதா "
"இந்தக்  கலியுகத்தில்,  ஹரி  நாமத்தைப்  பாடுவதைத்  தவிர,  வேறு  வழியில்லை",  என  மூன்று  முறை  அழுத்தமாகச்  சொல்லப்பட்டுள்ளது...!

" ஸ்ரீ  ராம  ராம  ராம  ராமேதி ",  என்ற  ஸ்லோகத்தில்,  'பகவான்  ஸ்ரீ  விஷ்ணுவுடைய  ஸஹஸ்ர  நாமங்களைப்  பாராயணம்  செய்வதும்,  'ராம'  என்ற  நாமத்தை  மும்முறை  உச்சரிப்பதும்  சமம்',  என  சிவ பெருமானே  பார்வதியிடம்  உரைக்கிறார்...! 

பக்த  பிரஹல்லாதனை  அனைத்து  கஷ்டங்களிளிருந்தும்  காத்தது,  "ஓம் நமோ  நாராயணாய"  என்ற  நாமமே...!  ஆஞ்சநேயருக்கு  பலத்தை  அளித்ததும்,  கடலைத்  தாண்ட  வைத்ததும்,  சீதா  பிராட்டியை  கண்டு  பிடிக்க உதவியதும்  சேது  பந்தனத்தை  கட்ட  உதவியதும்,  "ராம"  நாமமே...!

கம்பர்  தன்  ராமாயணத்தில்  'ராம'  நாமத்தைப்  பற்றி,
"நன்மையையும்  செல்வமும்  நாளும்  நல்குமே
திண்மையும்  பாவமும்  சிதைந்து  தேயுமே
ஜென்மமும்  மரணமும்  இன்றி  தீருமே
இம்மையே  ராமா  என்ற  இரண்டு  எழுத்தினால்",  என்று  பாடுகிறார்...!

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 22

பாக்தாபாய   புஜங்க   காருடமணி:   த்ரைலோக்ய   ரக்ஷாமணி:
கோபீ  லோசந   சாதகாம்புதமணி:   சௌந்தர்ய   முத்ராமணி:  /
ய:  காந்தாமணி   ருக்மிணீ    கநகுஜ   த்வந்த்வைக   புஷாமணி:
ஸ்ரேயோ தேவஸிகாமணிர் திஸது நோ கோபால சுடாமணி: //



ஆயர்  குலத்தின்  சூடாமணியாக  விளங்கும்  கிருஷ்ணன்  தன்னுடைய   பக்தர்களுக்கு  ஏற்படும்  துன்பங்களாகிய  பாம்புகளுக்கு  'கருடப் பச்சை'  என்ற  ரத்தினமாக  இருந்து  அவர்களைக்  காக்கிறான்...!   

மூன்று  உலகங்களையும்  ரக்ஷிக்கும்  திவ்ய  ரத்தினமாகத்  திகழ்கிறான்...!  

கோப  ஸ்திரீகளின்  கண்களாகிய  சாதகப்  பறவைகளுக்கு  மேகமாகிய  ரத்தினமாக  இருந்து  அவர்களின்  தாகத்தைத்  தீர்க்கிறான்...!

அனைத்து  அழகிற்கும்  அடையாளாமான  முத்திரை  மணியாக  ஒளிர்கிறான்...!  

மாதர்  குலத்தின்  ரத்தினமாக  விளங்கும்  ஸ்ரீ ருக்மிணீ  பிராட்டியின்  மார்பை  அலங்கரிக்கும்  அழகு  மணியாகத்  திகழ்கிறான்...!   

தேவ  தேவியர்களின்  மணி  முடியில்   விளங்கும்  சிகாமணியாக  அருள்கிறான்...! 

இந்த  கோபால  சுடாமணியாகிய  'ஸ்ரீ கிருஷ்ணன்'  நம்  அனைவருக்கும்  அருள்  தருவானாக...!   

Wednesday, March 14, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 21 


ஹே  கோபாலக  ஹே  க்ருபா  ஜலநிதே  ஹே   சிந்து  கன்யாபதே    
ஹே   கம்சாந்தக  ஹே  கஜேந்திர  கருணா  பாரின  ஹே  மாதவா  /
ஹே  ராமானுஜ   ஹே  ஜகத்ரய  குரோ  ஹே  புண்டரீகாக்ஷ  மாம்    
ஹே   கோபி   ஜனநாத  பாலய   பரம்   ஜானாமி   நத்வாம்   வினா    // 



ஹே  கோபாலனே...!   ஹே  கருணா  ஸாகரா...!  

ஹே (கடலரசனின் மகளான) மகாலக்ஷ்மியின் மணவாளனே..!   

ஹே  கம்சனை  ஸம்ஹரித்தவனே...!   
 
ஹே  கஜேந்திரனை  (தன் கருணையால்)  ரக்ஷித்தவனே...!   
 
ஹே  மாதவா...!  

ஹே  ராமாநுஜா  (பலராமனின்  தம்பியான  கிருஷ்ணா)...!  
 
ஹே  மூவுலகத்திற்கும்  ஆச்சார்யனே...!   
 
ஹே  தாமரைக்  கண்ணா...!   

ஹே  கோபியர்களின்  அன்புக்கு  பாத்திரமான  கண்ணா...!  

உன்னைத்  தவிர  நான்  வேறெதுவும்  அறியவில்லை...!  

என்னை ரக்ஷித்தருள்வாயாக...!
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 20 


பத்தேநாஞ்ஜலினா  நதேன  ஸிரஸா  காத்ரை:  ஸரோமோத்கமை:
கண்டேன ஸ்வரகத்கதேன  நயனேநோத்கீர்ண பாஷபாம்புநாம் /
நித்யம்   த்வத்  சரணாரவிந்த   யுகள   த்யானாம்ருதாஸ்வாதினாம்  
அஸ்மாகம்   ஸரஸீருகாக்ஷ   ஸததம்   ஸம்பத்யதாம்  ஜீவிதம்   //


ஹே தாமரைக் கண்ணா....!  

என்  கைகள்  இரண்டையும்  கூப்பி,  தலை  வணங்கி,  உடல்  மயிர்க்  கூச்சமெடுக்க,  குரல்  தடுமாற,  நா  தழுதழுக்க,  கண்கள்  இரண்டிலும்  நீர்  பெருக்கெடுத்து  ஓட,  உன்னுடைய  திருவடித்  தாமரைகளை  த்யானிப்பது  என்கிற  அம்ருத  ரசத்தை  எப்பொழுதும்  அருந்திக்  கொண்டே   என்னுடைய  வாழ்வு  நிறைவு  பெறட்டும்...! 


(உணர்ச்சிகளே  பக்திக்கு  அடிப்படையாக  உள்ளன...!  ஒரு  பக்தன்,  தன்   உள்ளத்தில்  அன்புடனும்,  அர்ப்பணிப்பு  உணர்வுடனும்  இறை  நிலையில்  ஒன்றி  தொழும்போது,  அவனிடம்  ஏற்படும்  புற மாற்றங்களே  இங்கு  கூறப்பட்டுள்ளன.  ஆழ்வார்கள்,  ஆச்சார்யர்கள்,  ஸ்ரீ சைதன்ய  மஹா  பிரபு,   ஸ்ரீ  ராமகிருஷ்ணர்,  சுவாமி  விவேகானந்தர்  போன்ற  அவதார  புருஷர்களின்  வாழ்விலும்  இவற்றைக்  காணலாம்.  

ஸ்ரீ சைதன்யர்  தன்  'சிக்ஷாஷ்டக' த்தில்  தன்  நிலையை  இவ்வாறு  கூறுகிறார்; 
 
"நயனம்  களத்  அஷ்ரு  தாரயா  வதனம்  கத்கத  ருத்தயாகிரா / 
புலகைர்  நிச்சிதம்  வபு கதா தவநாம க்ராஹணே பவிஷ்யதி // "
 

" இறைவா...!  உன்னுடைய  நாமங்களைக்  உச்சரித்த  மாத்திரத்திலேயே,  என்  கண்களிலிருந்து  தாரை  தாரையாக  கண்ணீர்  பெருக்கெடுக்கிறது;  என் குரலானது தடுமாறுகிறது; என்  உடலெங்கும் மயிர் கூச்சமேடுக்கிறது..!" "  

நம்மாழ்வார்  தன்  'பெரிய  திருவந்தாதி'யில் (34)  கீழ்  கண்டவாறு  கூறுவதையும்  ஒப்பு  நோக்கலாம்;

"பாலாழி  நீ  கிடக்கும்  பண்பையாம்  கேட்டேயும்
காலாழும்  நெஞ்சழியும்  கண்  சுழலும்...."

" ஹே  பரந்தாமா...!   பாற்கடலில்  நீ  பாம்பணையில்  துயிலும்  அழகைக்  கேட்ட  மாத்திரத்திலேயே  என்  கால்கள்  நிலை  கொள்ளாமல்  தள்ளாடுகின்றன;  என்  மனம்  என்  வசம்  இல்லாமல்  உன்னையே  அடைகிறது  (என்  மனத்  துவேஷங்கள்  அகன்று,  நீயே  அதனுள்  துலங்குகிறாய்);  என்  கண்களிரண்டும்  சுழலுகின்றன...! "