Holy Trinity

Holy Trinity

Sunday, February 5, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 5


நாஸ்தா தர்மே ந வஸு நிசயே நைவ காமோப போகே
யத் யத் பவ்யம் பாவது பகவந் பூர்வ கர்மாணு ரூபம் /
ஏதத் ப்ரார்த்யம் மம பாஹுமதம் ஜன்ம ஜன்மாந்தரேபி
த்வத் பாதாம்போருஹ யுககதா நிஸ்சலா பக்திரஸ்து //



பகவானே...! எனக்கு இந்த உலக தர்மங்களின் மீது எவ்விதமான பற்றும் இல்லை...! ஏராளமான செல்வக் குவியல்களின் மீதோ அல்லது சிற்றின்பத்தின் மீதோ எனக்கு நாட்டம் இல்லை...! என் முந்தைய ஜென்மங்களின் கர்ம வினைப்படியே, எது எது எப்படி நடக்க வேண்டுமோ, அப்படியே நடக்கட்டும்...! நான் உன்னிடம் வைக்கும் விருப்பமான கோரிக்கை என்னவென்றால், என்னுடைய எல்லா ஜன்மங்களிலும், உன் திருப் பாத கமலங்களில் மட்டும் ஸ்திரமான பக்தியினை தந்தருள வேண்டும் என்பதே...!


(பெருமாள் திருமொழியிலும் இதே கருத்தை, 'ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் செல்வமும், மண்ணரசும் யான் வேண்டேன்' என்று பாடுகிறார் குலசேகரர்.

தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் தன் "பச்சை மாமலை போல் மேனி' என்கிற பாசுரத்தில் 'இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்க மா நகருளானே " என்று கூறுவதை இங்கு ஒப்பிடலாம்.

தர்ம, அர்த்த, காமங்களில் உள்ள பற்றுகளை நீக்கி, பகவானுடைய ஸ்ரீ பாத கமலங்களால் மட்டுமே நம் மனமானது ஈர்க்கப்பட வேண்டும். இதற்கு தேவை சரணாகதி ஒன்றே...!

உலக போகங்களிலும், சிற்றின்பத்திலும் கிடைக்கும் சுகம் அநித்தியமானது. நித்தியமானவனாய், ஞான ஸ்வரூபனாய், ஆனந்தமயனுமாய் விளங்குகின்ற, குறையொன்றும் இல்லாத கோவிந்தனையே நாம் பாடிப் பரவ வேண்டும் என்பதையே குலசேகரர் இந்த ஸ்லோகத்தில் கூறுகிறார்.)

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 4


நாஹம் வந்தே தவசரணயோர் த்வந்த்வ மத்வந்த்வ ஹேதோ:
கும்பிபாகம் குருமபி ஹரே நாரகம் நாபநேதும் /
ரம்யா ராமா ம்ருதுதநுலதா நந்தநே நாபி ரந்தும்
பாவே பாவே ஹ்ருதய பவநே பாவயேயம் பவந்தம் //


ஹே ஹரி...! கொடிய பாவங்களை அழிப்பவனே...! மிகவும் திவ்யமானதும், தேவர்களால் கூட அடைய முடியாததுமாகிய, அந்த வைகுண்ட பதவியை அடைவதற்காகவோ, அல்லது நரக லோகத்திலுள்ள, மிகவும் கொடியதான, கும்பீபாகத்தில் தள்ளப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவோ, அல்லது சுவர்க்க லோகத்திலுள்ள நந்தவனத்தில், மிருதுவான மலர்க் கொடியைப் போன்ற உடலுடைய தேவலோகப் பெண்களை அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவோ, நான் உன்னுடைய திருவடித் தாமரைகளை வணங்கவில்லை...! நான் எத்தனை பிறவி எடுத்தாலும், ஒவ்வொரு பிறப்பிலும், உன்னை என் இதயமாகிய கோவிலுக்குள்ளே வைத்து அனுதினமும் பூஜிக்க வேண்டும் என்பதற்காகவே உன் திருவடிகளை வணங்குகின்றேன்.