Holy Trinity

Holy Trinity

Monday, January 23, 2012



ஸ்ரீ:
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ ராமகிருஷ்ண திருவடிகளே சரணம்

ஸ்ரீ லக்ஷ்மி நாதனும், சர்வேச்வரனும், கருணைக்கடலுமான, பகவான் ஸ்ரீமன் நாராயணன் இந்த நிலவுலகிலே மாயையில் சிக்குண்டு வெளியேறத்துடிக்கும் ஜீவர்கள் எந்நாளும் திருந்தி பக்தி நெறியை பற்றிக்கொண்டு தன்னடி சேருவதற்காகவே தன்னுடைய பரிவாரங்களை இந்த பூமியில் ஆழ்வார்களாக அவதரிக்க வைத்தான். அவர்களே பன்னிரு ஆழ்வார்கள் என போற்றப்படுகின்றனர்.

அப்பன்னிரு ஆழ்வார்களுள் ஸ்ரீ குலசேகர பெருமாள் என்றும், ஸ்ரீ குலசேகர ஆழ்வார் என்றும் அழைக்கப்படுகின்ற குலசேகர மன்னன், திருமாலின் திருமார்பில் திகழும் அணியான கௌஸ்துபம் என்னும் மணியின் அம்சமாகவே கி.பி. எட்டாம் நூற்றாண்டு, மாசி மாதம், புநர்பூச நட்சத்திரத்தில் இவ்வுலகில் அவதரித்தார். இவர், சேர நாட்டிலுள்ள கொல்லி நகர் என்ற திருவஞ்சிக்களம் என்னும் நகரைத் தன் தலைநகராகக்கொண்டு ஆண்டு வந்த அரசர் ஆவார். இவர் அரச பதவிகளையும், போகங்களையும் துறந்து, திருவரங்கம் சென்று, திருமாலின் திருவடிகளைப்பற்றி, அவனுடைய சேவையிலேயே என்றென்றும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். தேனினும் இனிய நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் உள்ள 'பெருமாள் திருமொழி' என்னும் அற்புதமான 105 பாடல்களை படைத்தார். இவரால் பாடப்பெற்ற திவ்ய தேசங்கள் மொத்தம் ஒன்பது ஆகும். இவர் இளமை முதலே பகவானுடைய திருஅவதாரங்களில் ஒன்றான, ராமாவதாரத்தில் தீராத காதலுடையவராய் திகழ்ந்தார். இவரே வடமொழியில் 'ஸ்ரீ முகுந்த மாலா' என்ற 40 பாடல்களாலாகிய ஸ்தோத்திரத்தையும் அருளிச்செய்துள்ளார்.

பரம்பொருளாகிய இறைவனின் உயர்ந்த நிலையையும், ஜீவர்களின் தாழ்ந்த நிலையையும் உணர்ந்து, நம் அனைவரையும் இந்த பிறப்பு இறப்பு என்னும் கரை காண முடியாத சம்சாரக்கடலில் மூழ்கிவிடாமல் காத்து, கரையேற்ற வல்லவன் அந்த கண்ணன் ஒருவனே என அறிந்து, மனமுருகிப்பாடிய ஸ்தோத்திரமே இந்த முகுந்த மாலை. இந்த பாடல்களில், குலசேகரர் எம்பெருமானுடைய பற்பல நாமங்களின் ஏற்றத்தையும், மகிமையையும் அற்புதமாகப் பாடியுள்ளார். இந்த பாடல்களை அனுதினமும் வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க, நம் அனைவருடைய பாவங்களும் தீயினில் பட்ட தூசு போல ஒன்றுமில்லாமல் போகும் என்பது திண்ணம்.

அடியேனுடைய சில நண்பர்களின் அன்பான வேண்டுகோளின் பேரில் இந்த 'ஸ்ரீ முகுந்தா மாலை' என்னும் இந்த பாடல் தொகுப்பினை சிறிது சிறிதாக வடமொழியிலிருந்து தமிழில் மொழி பெயர்க்க முனைகிறேன். இந்த மொழி பெயர்ப்பினை நேரடி மொழி பெயர்ப்பாகக் கருதாமல், சுதந்திர மொழி பெயர்ப்பாக கருதும்படி கேட்டுக்கொள்கிறேன். அவன் அருள் இருந்தால் மட்டுமே அவன் புகழைப் பாடவோ அல்லது எழுதவோ முடியும் என்பதனால், கண்ணன் கழலிணையே இறைஞ்சி, அவன் கருணையை வேண்டுகிறேன். இதில் இருக்கும் நிறைகளைக் கொண்டாட அடியேனுக்கு எந்த உரிமையும் கிடையாது. தவறுகளுக்கு நானே முழு பொறுப்பு. இதில் ஏதேனும் குற்றம் குறை இருப்பின் அன்பர்கள் கருணை கூர்ந்து சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள அடியேன் சித்தமாயிருக்கிறேன்.

இந்த முகுந்த மாலை ஸ்தோத்திரத்தை அனைவரும் படித்து இன்புற்று, மனத்தில் இருத்தி, இனிதே பக்தி நெறியைப் பற்றி வாழ்ந்து, நற்கதி அடைய, ஜகத்காரணனும், சர்வேச்வரனும், சரணாகத வத்சலனுமான, ஸ்ரீமன் நாராயணனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்.

தாசன்,
சுவாமி கேசவானந்தா

(40 சுலோகங்களும், ஒவ்வொரு ஸ்லோகமாக, தனித்தனி மின்னஞ்சல்களில் அனுப்பப்படும்)







No comments:

Post a Comment