Holy Trinity

Holy Trinity

Sunday, March 11, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 14

த்ருஷ்ணா தோயே மதந பவநோத்தூத மோஹோர்மி மாலே
தாராவர்த்தே  தநய  ஸஹஜ  க்ராஹ  ஸங்காகுலே  ச /
ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ  மஜ்ஜதாம்  நஸ்த்ரி தாமந்
பாதாம்போஜே  வரத பவதோ  பக்திநாவம்  ப்ரயச்ச //



ஸம்சார   வாழ்க்கையே   ஒரு   ஆழப்   பெருங்கடல்...!   இக்கடலில்,  பேராசையே   தண்ணீர்   ஆகும்...!   அதில்,  காமத்தினால்  (சிற்றின்பத்தால்)   உண்டாகும்  மன மயக்கமே  காற்றினால்  உந்தப்பட்டு  மேலே  ஏழும்  பேரலைகளின்  தொடராகும்...!  இது  மனைவி  (அல்லது கணவன்)  என்ற  நீர்ச் சுழலினாலும்;  மக்கள்,  உடன்  பிறப்புக்கள்,  உறவினர்கள்  என்ற முதலைக்  கூட்டங்களாலும்,  கலங்கிப்  போய்  உள்ளது...!  இந்த  பயங்கரமான  ஸம்சாரக்  கடலில்  மூழ்கித்  தத்தளிக்கும்  எங்களுக்கு,  ஹே..!  வரதா...!  த்ரிலோக  நாயகா...!  உன்  திருவடிகளை  அடைவதற்கு,  'பக்தி'  என்ற  படகைத்  தருவீராக...!


(உலக  மாயையில்  சிக்குண்ட  ஒரு  சாதாரண  மனிதனின்  நிலையே  மேலே கூறப்பட்டுள்ளது.  ஒருவனுடைய  மனமானது  ஆறு  பகைவர்களான  காமம் (ஆசை),  குரோதம்  (கோபம்),  லோபம் (பேராசை),  மோஹம் (மன மயக்கம்),  மதம் (தற் பெருமை),  மாத்சர்யம் ( பொறாமை)  ஆகியவற்றால்  பீடிக்கப்படுகிறது. 

கீதையில், ஸாங்கிய யோகத்தில்,  ஸ்ரீ கிருஷ்ணர்;

"த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ் தேஷுப ஜாயதே /
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமத் க்ரோதோபிஜாயதே //
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: 
ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம: /
ஸம்ருதி ப்ரம்சாத் புத்தி நசோ புத்தி நாசாத் ப்ரணஷ்யதி // (2.62/63)

"ஒருவன்  சாதாரண  உலகப்  பொருளை  நினைப்பதால்,  அவனுக்கு  அதன்  மீது  பற்று  ஏற்படுகிறது;  அந்த  பற்று  ஆசையாக  மாறுகிறது;  ஆசையால்  கோபம் 
(அந்தப்  பொருள்  கிடைக்காமல்  போகும்  போது)  எழுகிறது;  கோபத்தினால்  மன  மயக்கம்  ஏற்படுகிறது;  மன  மயக்கத்தால்  அவன்  சிந்திக்கும்  அறிவை  இழக்கிறான்;  அறிவை  இழந்ததும்,  பகுத்தறியும்  ஆற்றல்  போய்விடுகிறது;  புத்தியை  இழந்தவன்  தன்னைத் தானே  அழித்துக்  கொள்கிறான் "  என்று  தெரிவிக்கிறார்.

ஆசைகள்  மற்றும்  எண்ணங்கள்  ஆகியவற்றின்  தொகுப்பே  'மனம்'  ஆகும். இந்த  மனமே  எல்லாவற்றுக்கும்  காரணமாக  உள்ளது. 

விஷ்ணு  புராணத்தில், 
"மன  ஏவ  மனுஷ்யாணாம்  காரணம்  பந்த  மோக்ஷயோ:" 
என்று  கூறப்பட்டுள்ளது.  அதாவது, 
"ஒரு  மனிதனை  உலகில்  பந்தப்படுத்துவதும்,  பந்தத்திலிருந்து  விடுவிப்பதும்  அவனுடைய  மனம்  தான்".

உபநிஷத  வாக்கியமும், 
"மன  ஏவ  மஹா  ரிபு:  =  மனமே  மேலான  பகைவன்",  என்று  கூறுகிறது.

பற்று  வைப்பதைத்  தவிர்த்தலே  இன்றியமையாதது.  சுகத்தில்  நாட்டம்  கொள்ளாமல்,  துக்கத்தில்  துவளாமல்,  பற்று  பயம்  கோபம்  முதலியவற்றை  விட்டவனையே  'ஸ்தித புத்தி'  (விழிப்புற்ற அறிவு)  உடையவன்  என்று  கீதையில்  கிருஷ்ணர்  கூறுகிறார்.  அவன்  ஸுக,  துக்கங்களை  நாடுவதோ,  உணருவதே இல்லை. 

'ஸுகத்தில்  நாட்டம்  இல்லாதவன்'  என்றால்  எவ்வாறு  இருப்பான்..? 

அதை  ஸ்ரீ  ராமானுஜர்  தன்  ஸ்ரீ  பாஷ்யத்தில், 
"ப்ரியேஷு  ஸன்னிஹிதெஷு  அபி  நிஸ்ப்ருக: 
அவன்  விரும்பும்  பொருள்  அவனிடத்திலேயே  இருந்தாலும்,  அவற்றால் அவன்  கவரப்படுவதில்லை.

அனாகதேஷு  ஸ்ப்ருஹா  ராக:  தத்ரஹித:
கிடைக்காத  பொருளை  நினைத்து  அவன்  ஏங்குவதும்  இல்லை."  என்கிறார்.  எனவே,  அவனுக்கு  துக்கமும்  ஏற்படுவதில்லை. 

No comments:

Post a Comment