Holy Trinity

Holy Trinity

Thursday, March 29, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 27

மஜ்ஜந்மந:  பலமிதம்  மதுகைட  பாரே 
  மத்  ப்ரார்த்தநீய  மதநுக்ரஹ  ஏஷ  ஏவ /
த்வத்  ப்ருத்ய  ப்ருத்ய  பரிசாரக  ப்ருத்ய  ப்ருத்ய 
 ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோகநாத  //


மது,  கைடபன்  போன்ற  பயங்கர  அசுரர்களை  ஸம்ஹரித்தவனே...!  

அனைத்து  உலகங்களுக்கும்  தலைவனாக  விளங்கும்  இறைவா...! 
  
நான்  இந்த  ஜன்மம்  எடுத்ததற்கு  பலன்  உண்டாகில்  இது  ஒன்று  தான்...! 
 
நான்  உன்னிடம்  பிரார்த்தித்து,  நீ  எனக்கு  அருள  வேண்டியதும்  இது  ஒன்று  தான்...!  

பகவானே, உன்னுடைய  அடியார்க்கு  அடியார்,  அவர்க்கு  அடியார்  என்ற  வரிசையில்,  ஏழாவது  படியில்  இருக்கும்  ஒரு  சாதாரண  தொண்டனாக  என்னை   நீ   நினைத்துக்  கொள்ள  வேண்டும்...! 


[இக்கலியுகத்தில்,  நாம்  நேராக  இறைவனைப்  பற்றிக்கொள்வது  என்பது  மிகவும்  கடினமான  ஒன்றாகும்.  ஆனால்,  அவரது  அடியார்களான  பக்தர்களுக்கு  சேவை  செய்து,  இறைவனின்  அருளுக்கு  பாத்திரம்  ஆவது,  மிகவும்  மேலான  ஒன்றாகும்.  'அஹம்  பக்த  பராதீன',  'நான்  என்  பக்தர்களுக்கு  கட்டுண்டவன்',  என  பகவானே  'அம்பரீஷ  சரித்திரத்தில்'  திருவாய்  மலர்ந்தருளியுள்ளார்...!  விப்ர நாராயணர்  (தொண்டரடிப் பொடி ஆழ்வார்)  என்ற  மஹா  புருஷரே,  தன்னைப்   பகவானுடைய   தொண்டர்களின்  பாத  தூளியாகக்  கருதினார்...!

உண்மை  பக்தன்  எப்படி  இருப்பான்..?  அவனுடைய  குணங்கள்  யாவை..? 

'எங்கும்  நீக்கமற  நிறைந்தவரும்,  சர்வ  வல்லமை  படைத்தவரும்,  அந்தர்யாமியுமாய்  இருப்பவருமான  பகவானுடைய  திவ்ய  மங்கள  அவதாரங்களிலும்,  அவன்  அவதார  நிகழ்வுகளிலும்,  அவன்  லீலா  விநோதங்களிலும்,  அவன்  திருவாய்  மலர்ந்தருளிய  சொற்களிலும்,  கீதாசார்யனாக  அவன்  அருளிய  உபதேசங்களிலும்,  அவனுடைய  கல்யாண  குணங்களிலும்,  திவ்ய ப்ரபாவங்களிலும்,  எவன்  ஒருவன்  சிறிதும்  சந்தேகமின்றி  நம்பிக்கை  கொள்கிறானோ,  மற்றும்  இவற்றையெல்லாம்  தன்  மனக்  கண்களால்  பார்த்துப்  பார்த்துப்  பூரித்து  மகிழ்கிறானோ,  அவனே  உண்மை  'பக்தன்'  ஆவான்'. 

'அந்த  பக்தனானவன்,  அஹங்காரம் (நான்),  மமகாரம் (எனது),  விருப்பு-வெறுப்பு,  மகிழ்ச்சி-துயரம்,  காமம்-குரோதம்,  லாபம்-நஷ்டம்,  வெற்றி-தோல்வி,  புகழ்ச்சி-இகழ்ச்சி  போன்றவற்றில்  அகப்பட்டுக்  கொள்ளாமல்  ஒதுங்கி,  ஸம பாவனையும்,  நாவடக்கமும்,  மன சாந்தியும்  கொண்டவனாய்,  சத் சங்கம்  மற்றும்  ஜீவர்களிடத்தில்  கருணையும்,  பக்தர்களிடத்தில்  நட்புறவும்  உடையவனாய்  இருப்பான்'.   

அந்த  பக்தன்,  பகவானிடத்தில்  பரமப்  பிரேமை  (காதல்) கொண்டு,  பரம  காருண்யனாக  விளங்கும்  அவன்  ஒருவனே  தனக்கு  கதி,  உயர்ந்த  புகலிடம்,  தன்  உயிருக்கு  ஆதாரம்,  அனைத்தும்  அவனே  என்று  உறுதி  கொண்டு ,  அந்த  பகவானிடத்தில்  தன்  பொறுப்பை  ஒப்படைத்து,  அவன்  தனக்கு  விதித்ததை  மன  மகிழ்ச்சியுடன்,  சலனமில்லாமல்,  ஒரு  மனதுடன்  ஏற்றுக் கொள்கிறான்.  அவனே  'சரணாகதன்'  ஆவான்.   இவர்களையே,  பகவான்  ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில்  'எனக்கு  மிகவும்  பிரியமான  பக்தர்கள்'  என்று  கூறுகிறார். 

பகவான்  கூறியவற்றுள்  (மேலே கூறியபடி)  ஒரு  சிறிதேனும்  நம்  வாழ்க்கையில்  கடைபிடித்தால்  மட்டுமே  கடைத்தேற  முடியும். 

வெறும்  'சரணாகதி - சரணாகதி'  என்றும்,  'எல்லாம் இறைவன் விட்ட வழி'  என்றும்  வாயால்  கூறிக்கொண்டு,  வெளி வேஷத்துடன்,  தன்  உதட்டளவில் மந்திரமும்,  மனம்  முழுதும்  அப்பிக் கிடக்கும்  அழுக்குடன்  திரிவதால்  எவ்விதப்  பயனும்  ஏற்பட்டு  விடாது.  இதனால்  தான்,  'உள்  ஒன்று  வைத்துப்  புறம்  ஒன்று  பேசுவார்  உறவு  கலவாமை  வேண்டும்',  என்று பெரியவர்கள்  சொல்லி  வைத்துப்  போனார்கள்.  இவர்களைப்  போன்றவர்களுக்கு,  வெளியே  ஒரு  சிறிது  மரியாதையும்,  முன்னுரிமையும்  கிடக்கலாமே  ஒழிய,  பெரிதாக  ஒன்றும்  ஏற்பட்டு  விடாது.  இவ்வாறு  தன்னையும்,  பிறரையும்  ஏமாற்றிக்கொண்டு  திரிவதால்,  இவர்கள்  மேலும்  மேலும்  பாவங்களையே  சம்பாதித்துக்  கொள்கின்றனர்.  இவர்கள்  மீளா  துயர்  தரும்  நரகங்களில்  அகப்பட்டு,  மேன்மேலும்  பிறவிப்  பெருந் தளையில்  சிக்குண்டு  துக்கப்படுவதைத்   தவிர வேறு  வழியில்லை...!! ] 

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 26


ஸ்ரீ மந்   நாம   ப்ரோச்ய   நாராயணாக்யம்  
கே    ந   ப்ராபுர்  வாஞ்சிதம்  பாபிநோபி   /
ஹா ந: பூர்வம் வாக்ப்ரவ்ருத்தா ந தஸ்மின்
தேந  ப்ராப்தம்  கர்ப  வாஸாதி  துக்கம்  // 


'ஸ்ரீ'  என்ற  மகா லக்ஷ்மியுடன்  கூடியதான  'ஸ்ரீ மந்  நாராயணா'  என்னும்  திவ்யமான  திரு  நாமத்தை  உச்சரித்து,  எவர்  தான்  பயன்  பெறவில்லை..?   

பெரும்  பாவியும்  கூட  தான்  விரும்பிய  பலன்களைப்  பெற்றிருக்கிறான்...!  

என்  முந்தைய  பிறவிகளிலேயே    பகவானின்  அந்த  திவ்ய  நாமத்தைச்  சொல்ல  வேண்டுமென்று   எனக்குத்  தோன்றவில்லையே..!    

 ஐயோ..!    அந்த  காரணத்தால்  தான்  எனக்கு  கர்ப்ப  வாஸம்  போன்ற  துக்கமெல்லாம்  வந்து விட்டது...!  

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 25


ஆம்நாயா  ப்யஸநாந்யண்ய  ருதிதம்  வேத  வ்ரதாந்  யந்வஹம்
மேதஸ்   சேத   பலாநி    பூர்த்த    விதய:    ஸர்வே    ஹுதம்    பஸ்மநி      /
தீர்த்தாநாம்  அவ   காஹநாநி   ச   கஜஸ்நாநம்  விநா  யத்   பத   -
த்வந்த்வாம்போருக ஸம்ஸ்ம்ருதீர்  விஜயதே தேவஸ் ஸ  நாராயண:  // 



பகவான்  வெற்றி  கொள்வாராக..!   

இறைவனின்  பாத  கமலங்களை  ஒரு  சிறிதேனும்  மனத்தால்  சிந்தனை  செய்யாமல்,  வேத  சாஸ்திரங்களைக்  கற்பது  என்பது,  காட்டிற்குள்  சென்று  தனியாக  புலம்புவதற்கு  சமமாகும்...!  

வைதீக  விரதங்களைக்   கடைபிடிப்பது  என்பது,  உடம்பிலுள்ள  அதிகப்படியான  கொழுப்பைக்  கரைப்பதற்கு  மட்டுமே  உபயோகப்படும்...!  

தரும  காரியங்களான  கிணறு  தோண்டுதல்,  குளம்  வெட்டுதல்  போன்றவை,  நெருப்பிலாமல்  வெறும்  சாம்பலில்  செய்த  ஹோமத்திற்கு  ஒப்பாகும்...! 

கங்கை  போன்ற  புண்ய  தீர்த்தங்களில்  ஸ்நானம்  செய்வது  என்பது,  ஒரு  யானையைக்  குளிக்கச்  செய்வதற்கு  சமமாகும்...!   

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 24 


வ்யாமோஹ ப்ரஸமௌஷதம் முநிமநோவ்ருத்தி ப்ரவ்ருத்யௌஷதம்
தைத்யேந்த்ரார்த்திக ரௌஷதம் த்ரிஜகதாம் ஸஞ்ஜீவநைகௌஷதம் /
பக்த்யாத்  யந்த  ஹிதௌஷதம்   பவ  பய   ப்ரத்வம்ஸ  நைகௌஷதம் 
ஸ்ரேயப்ராப்திக  ரௌஷதம்  பிப  மந:  ஸ்ரீ  க்ருஷ்ண  திவ்யௌஷதம்  //



ஹே  மனமே...!

'ஸ்ரீ  கிருஷ்ணன்'  என்ற  ஔஷதத்தைப்  (மருந்தை)  அருந்துவாயாக...! 

அந்த  ஔஷதம்  மன  மயக்கங்களைப்  போக்க  வல்லது...! 

ரிஷி  முனிவர்களின்  மனத்தை  எப்போதும்  இறைவனிடமே  ஒன்றி  வைத்திருக்கக்  கூடியது...! 

அசுரர்களுக்கு  பெரும்  இன்னல்களைத்  தரக்கூடியது...!  

மூவுலகங்களுக்கும்  நன்மை  பயப்பது...!  

பக்தர்களுக்கு  அளவிலா  இதத்தைத்  தருவது...! 

'சம்சாரம்'  (பிறவிப் பிணி)  என்ற  கஷ்டத்தை  நீக்குவது...!  

நல்லன  எல்லாவற்றையும்  அளிப்பது...!

Tuesday, March 27, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //



ஸ்லோகம் - 23
ஸத்ருச்  சேதைக  மந்த்ரம்  ஸகலமுபநிஷத்  வாக்ய  ஸம்பூஜ்ய  மந்த்ரம்  
ஸம்ஸாரோத்தார   மந்த்ரம்   ஸமுபசிதஸ்   ஸங்க   நிர்யாண  மந்த்ரம்    //
ஸர்வைஸ்வர்யைக மந்த்ரம் வ்யஸநபுஜக ஸந்தஷ்ட ஸந்த்ராண மந்த்ரம்
ஜிஹ்வே  ஸ்ரீ க்ருஷ்ண  மந்த்ரம் ஜபஜப  ஸததம்  ஜந்ம  ஸாபல்ய மந்த்ரம் //

ஹே நாக்கே...!


ஸ்ரீ க்ருஷ்ண மந்திரத்தையே எப்போதும் ஜபித்துக்கொண்டே இரு...!  என்னென்றால்;


அந்த மந்திரம் நம்முடைய பகைவர்களை ஒழிக்கிறது...! 


உபநிஷத்துக்கள் அனைத்தும் இந்த மந்திரத்தையே போற்றுகின்றன...!  


இம்மந்திரம் நம்மை இந்தப்  பிறவியாகிய பெருங்கடலை சுலபமாக தாண்ட வைக்கிறது...! 


நாம் சிக்கித் தவிக்கும்  அக்ஞானமாகிய மாய இருளை இம்மந்திரம் அகற்றுகிறது...! 


இது நமக்கு அனைத்து செல்வங்களையும் அடைவிக்கிறது...!  


இந்த மந்திரம் பற்பல துன்பங்களாகிய பாம்புகளால் கடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுகிறது..! 


நாம் எடுத்த இப்பிறவியின் பயனை இம்மந்திரம் நமக்கு அருள்கிறது...!



(இந்த  ஸ்லோகத்தின்  மூலம்  இறைவனின்  நாம  மகிமையை  எடுத்துரைக்கிறார்  குலசேகரர்.  நாம  ஜபத்தின்  மகிமைகளை  பற்பல  பெரியோர்கள்  எடுத்துரைத்துள்ளனர். 


திருமங்கை ஆழ்வாரும்  தன்  'பெரிய  திருமொழியில்' (1-1-9) 


"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் 
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் 
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற 
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமம்..! "

" நாராயணா  என்ற  திருநாமத்தின்  மகிமையே  மகிமை..!   அது என்னவெல்லாம்  செய்யும்  தெரியுமா ?  தன்னை  வணங்குபவர்க்கு   உயர்ந்த  கதியைத்  தரும்;  பெரும்  செல்வத்தைக்  கொடுக்கும்;  தன்  அடியவர்களின்  துன்பங்களை  ஒன்றுமில்லாமல்  செய்து  விடும்;  மேலான  பரமபதத்தை  அளிக்கும்;  நாம்  எடுத்த  காரியங்களில்  வெற்றியையே  கொடுக்கும்;  நாம்  விரும்பும்  நன்மைகளைத்  தரும்;  பெற்றெடுத்த  தாயை   விட,  நமக்கு  நல்லதையே  செய்யும்;  இவ்வாறான,  நன்மைகளையே  தரும்  'நாராயணா'  என்னும்  திருமந்திரத்தை  நான்  இன்று  கண்டு கொண்டேன்.! ", என்று  கூறுகிறார்.

ஸ்ரீமத்  பாகவத  மஹா  புராணத்தில்,  பகவான்  ஸ்ரீமந்  நாராயணன்  தேவரிஷியான  நாரதரிடம், 
 "யத்ர  காயந்தி  மத்  பக்தோ  தத்ர  திஷ்டாமி", 
 "என்னுடைய  பக்தர்கள்  எங்கு  என்   நாம  சந்கீர்த்தனத்தைப்  பாடுகிறார்களோ,  அங்கு  நான்  இருக்கிறேன்",  
என்று  கூறுகிறார். 


மற்றொரு  ஸ்லோகமும்  பகவானின்  நாம  மகிமையினைப்  பற்றிக்  கூறுகிறது. 
"ஹரேர்  நாம  ஹரேர்  நாம  ஹரேர்  நாமைவ  கேவலம் - கலௌ 
 நாஸ்த்யேவ  நாஸ்த்யேவ  நாஸ்த்யேவ  கதிர்  அன்யதா "
"இந்தக்  கலியுகத்தில்,  ஹரி  நாமத்தைப்  பாடுவதைத்  தவிர,  வேறு  வழியில்லை",  என  மூன்று  முறை  அழுத்தமாகச்  சொல்லப்பட்டுள்ளது...!

" ஸ்ரீ  ராம  ராம  ராம  ராமேதி ",  என்ற  ஸ்லோகத்தில்,  'பகவான்  ஸ்ரீ  விஷ்ணுவுடைய  ஸஹஸ்ர  நாமங்களைப்  பாராயணம்  செய்வதும்,  'ராம'  என்ற  நாமத்தை  மும்முறை  உச்சரிப்பதும்  சமம்',  என  சிவ பெருமானே  பார்வதியிடம்  உரைக்கிறார்...! 

பக்த  பிரஹல்லாதனை  அனைத்து  கஷ்டங்களிளிருந்தும்  காத்தது,  "ஓம் நமோ  நாராயணாய"  என்ற  நாமமே...!  ஆஞ்சநேயருக்கு  பலத்தை  அளித்ததும்,  கடலைத்  தாண்ட  வைத்ததும்,  சீதா  பிராட்டியை  கண்டு  பிடிக்க உதவியதும்  சேது  பந்தனத்தை  கட்ட  உதவியதும்,  "ராம"  நாமமே...!

கம்பர்  தன்  ராமாயணத்தில்  'ராம'  நாமத்தைப்  பற்றி,
"நன்மையையும்  செல்வமும்  நாளும்  நல்குமே
திண்மையும்  பாவமும்  சிதைந்து  தேயுமே
ஜென்மமும்  மரணமும்  இன்றி  தீருமே
இம்மையே  ராமா  என்ற  இரண்டு  எழுத்தினால்",  என்று  பாடுகிறார்...!

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 22

பாக்தாபாய   புஜங்க   காருடமணி:   த்ரைலோக்ய   ரக்ஷாமணி:
கோபீ  லோசந   சாதகாம்புதமணி:   சௌந்தர்ய   முத்ராமணி:  /
ய:  காந்தாமணி   ருக்மிணீ    கநகுஜ   த்வந்த்வைக   புஷாமணி:
ஸ்ரேயோ தேவஸிகாமணிர் திஸது நோ கோபால சுடாமணி: //



ஆயர்  குலத்தின்  சூடாமணியாக  விளங்கும்  கிருஷ்ணன்  தன்னுடைய   பக்தர்களுக்கு  ஏற்படும்  துன்பங்களாகிய  பாம்புகளுக்கு  'கருடப் பச்சை'  என்ற  ரத்தினமாக  இருந்து  அவர்களைக்  காக்கிறான்...!   

மூன்று  உலகங்களையும்  ரக்ஷிக்கும்  திவ்ய  ரத்தினமாகத்  திகழ்கிறான்...!  

கோப  ஸ்திரீகளின்  கண்களாகிய  சாதகப்  பறவைகளுக்கு  மேகமாகிய  ரத்தினமாக  இருந்து  அவர்களின்  தாகத்தைத்  தீர்க்கிறான்...!

அனைத்து  அழகிற்கும்  அடையாளாமான  முத்திரை  மணியாக  ஒளிர்கிறான்...!  

மாதர்  குலத்தின்  ரத்தினமாக  விளங்கும்  ஸ்ரீ ருக்மிணீ  பிராட்டியின்  மார்பை  அலங்கரிக்கும்  அழகு  மணியாகத்  திகழ்கிறான்...!   

தேவ  தேவியர்களின்  மணி  முடியில்   விளங்கும்  சிகாமணியாக  அருள்கிறான்...! 

இந்த  கோபால  சுடாமணியாகிய  'ஸ்ரீ கிருஷ்ணன்'  நம்  அனைவருக்கும்  அருள்  தருவானாக...!   

Wednesday, March 14, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 21 


ஹே  கோபாலக  ஹே  க்ருபா  ஜலநிதே  ஹே   சிந்து  கன்யாபதே    
ஹே   கம்சாந்தக  ஹே  கஜேந்திர  கருணா  பாரின  ஹே  மாதவா  /
ஹே  ராமானுஜ   ஹே  ஜகத்ரய  குரோ  ஹே  புண்டரீகாக்ஷ  மாம்    
ஹே   கோபி   ஜனநாத  பாலய   பரம்   ஜானாமி   நத்வாம்   வினா    // 



ஹே  கோபாலனே...!   ஹே  கருணா  ஸாகரா...!  

ஹே (கடலரசனின் மகளான) மகாலக்ஷ்மியின் மணவாளனே..!   

ஹே  கம்சனை  ஸம்ஹரித்தவனே...!   
 
ஹே  கஜேந்திரனை  (தன் கருணையால்)  ரக்ஷித்தவனே...!   
 
ஹே  மாதவா...!  

ஹே  ராமாநுஜா  (பலராமனின்  தம்பியான  கிருஷ்ணா)...!  
 
ஹே  மூவுலகத்திற்கும்  ஆச்சார்யனே...!   
 
ஹே  தாமரைக்  கண்ணா...!   

ஹே  கோபியர்களின்  அன்புக்கு  பாத்திரமான  கண்ணா...!  

உன்னைத்  தவிர  நான்  வேறெதுவும்  அறியவில்லை...!  

என்னை ரக்ஷித்தருள்வாயாக...!
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 20 


பத்தேநாஞ்ஜலினா  நதேன  ஸிரஸா  காத்ரை:  ஸரோமோத்கமை:
கண்டேன ஸ்வரகத்கதேன  நயனேநோத்கீர்ண பாஷபாம்புநாம் /
நித்யம்   த்வத்  சரணாரவிந்த   யுகள   த்யானாம்ருதாஸ்வாதினாம்  
அஸ்மாகம்   ஸரஸீருகாக்ஷ   ஸததம்   ஸம்பத்யதாம்  ஜீவிதம்   //


ஹே தாமரைக் கண்ணா....!  

என்  கைகள்  இரண்டையும்  கூப்பி,  தலை  வணங்கி,  உடல்  மயிர்க்  கூச்சமெடுக்க,  குரல்  தடுமாற,  நா  தழுதழுக்க,  கண்கள்  இரண்டிலும்  நீர்  பெருக்கெடுத்து  ஓட,  உன்னுடைய  திருவடித்  தாமரைகளை  த்யானிப்பது  என்கிற  அம்ருத  ரசத்தை  எப்பொழுதும்  அருந்திக்  கொண்டே   என்னுடைய  வாழ்வு  நிறைவு  பெறட்டும்...! 


(உணர்ச்சிகளே  பக்திக்கு  அடிப்படையாக  உள்ளன...!  ஒரு  பக்தன்,  தன்   உள்ளத்தில்  அன்புடனும்,  அர்ப்பணிப்பு  உணர்வுடனும்  இறை  நிலையில்  ஒன்றி  தொழும்போது,  அவனிடம்  ஏற்படும்  புற மாற்றங்களே  இங்கு  கூறப்பட்டுள்ளன.  ஆழ்வார்கள்,  ஆச்சார்யர்கள்,  ஸ்ரீ சைதன்ய  மஹா  பிரபு,   ஸ்ரீ  ராமகிருஷ்ணர்,  சுவாமி  விவேகானந்தர்  போன்ற  அவதார  புருஷர்களின்  வாழ்விலும்  இவற்றைக்  காணலாம்.  

ஸ்ரீ சைதன்யர்  தன்  'சிக்ஷாஷ்டக' த்தில்  தன்  நிலையை  இவ்வாறு  கூறுகிறார்; 
 
"நயனம்  களத்  அஷ்ரு  தாரயா  வதனம்  கத்கத  ருத்தயாகிரா / 
புலகைர்  நிச்சிதம்  வபு கதா தவநாம க்ராஹணே பவிஷ்யதி // "
 

" இறைவா...!  உன்னுடைய  நாமங்களைக்  உச்சரித்த  மாத்திரத்திலேயே,  என்  கண்களிலிருந்து  தாரை  தாரையாக  கண்ணீர்  பெருக்கெடுக்கிறது;  என் குரலானது தடுமாறுகிறது; என்  உடலெங்கும் மயிர் கூச்சமேடுக்கிறது..!" "  

நம்மாழ்வார்  தன்  'பெரிய  திருவந்தாதி'யில் (34)  கீழ்  கண்டவாறு  கூறுவதையும்  ஒப்பு  நோக்கலாம்;

"பாலாழி  நீ  கிடக்கும்  பண்பையாம்  கேட்டேயும்
காலாழும்  நெஞ்சழியும்  கண்  சுழலும்...."

" ஹே  பரந்தாமா...!   பாற்கடலில்  நீ  பாம்பணையில்  துயிலும்  அழகைக்  கேட்ட  மாத்திரத்திலேயே  என்  கால்கள்  நிலை  கொள்ளாமல்  தள்ளாடுகின்றன;  என்  மனம்  என்  வசம்  இல்லாமல்  உன்னையே  அடைகிறது  (என்  மனத்  துவேஷங்கள்  அகன்று,  நீயே  அதனுள்  துலங்குகிறாய்);  என்  கண்களிரண்டும்  சுழலுகின்றன...! "
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 19


ப்ருத்வி  ரேணுரணு:  பயாம்ஸி  கணிகா:  பல்கு  ஸ்புலிங்கோ  நலஸ்  
தேஜோ  நிஸ்வஸநம்  மருத்தநுதரம்  ரந்த்ரம்  ஸுஸூக்ஷ்மம்  நப:/
க்ஷுத்ரா    ருத்ர    பிதாமஹ   ப்ரப்ருதய:   கீடா:   ஸமஸ்தாஸ்   ஸுரா:  
த்ருஷ்டே   யத்ர   ஸ  தாவகோ   விஜயதே   பூமாவ   தூதாவதி:  //
   

பகவானே...!  உன்னுடைய  உன்னதமான  மகிமைகளையும்,  திவ்யமான  லீலைகளையும்  காணும்  போது,  இந்த  பூமியானது  மிகவும்  சிறிய  தூசி  போலவும்,  மொத்த  ஜலமும்  ஒரு  சிறு  துளி  போலவும்,  நெருப்பெல்லாம்   ஒரு  சிறு  பொறி  போலவும்,  காற்றானது  ஒரு  மூச்சுக்  காற்று  போலவும்,  ஆகாயமானது  சிறிய  துவாரம்  போலவும்  தோற்றமளிக்கிறது...!  ருத்திரன்,  பிரம்மன்   போன்ற   தேவர்கள்  அனைவரும்   சிறு   புழுக்கள்  போலவும்  தோற்றமளிக்கின்றனர்...!    இப்படிப்பட்ட   உனது   அளவு   கடந்த  மகிமையானது   வெற்றி   கொள்ளட்டும்...!  

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 18 

ஹே மர்த்யா:  பரமம்  ஹிதம்  ஸ்ருணுதவோ  வக்ஷ்யாமி  சங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவ  மாபதூர்மி பகுளம் ஸம் யக் ப்ரவிஷ்ய ஸ்திதா:/
நாநா  ஜ்யாத  மபாஸ்ய  சேதஸி  நமோ  நாராயணாயேத்யமும்     
மந்த்ரம்  ஸப்ரணவம்  ப்ரணாம  ஸஹிதம்  ப்ராவர்த்தயத்வம்  முஹு://


ஹே  மானிடர்களே...!  
எண்ணற்ற  ஆபத்துக்கள்  சூழ்ந்த  இந்த  பிறவிப்  பெருங்கடலில்  மூழ்கித்  தத்தளிக்கும்   உங்களுக்கு   மிகவும்   நன்மை   பயக்கும்  மேன்மையான   உபாயத்தைக்  கூறுகிறேன்;  கவனமாகக்  கேளுங்கள்...!   உலகத்தில்  உள்ள,  பலவிதமான  விஷயங்களையெல்லாம்  அறிந்து  கொள்வதை  விட்டு  விட்டு  'ஓம்'  என்னும்   பிரணாவாகாரத்துடன்   கூடிய   திரு அஷ்டாக்ஷரமாகிய  'ஓம் நமோ நாராயணாய'  என்ற   மந்திரத்தை  வணங்கி  மனதில்  ஜபம்  செய்து  கொண்டே  இருங்கள்...! 


( ஒருவருக்கு,  அவருக்குப்  பிடித்ததைச்  சொல்லுவது  என்பது  வேறு;  அவருக்கு  எது  நல்லதோ  அதைச்  சொல்லுவது  என்பது  வேறு...!  முதலாவது,  அவரைத்  திருப்திப்  படுத்துவதற்கு;  இரண்டாவது,  அவரை  நல்வழிப்  படுத்துவதற்கு...!  இங்கு,  குலசேகரர்  '
பரமம்  ஹிதம்   ஸ்ருணுதவோ  வக்ஷ்யாமி',  அதாவது 'மிகவும்  உயர்ந்த  நம்மையைக்   கூறுகிறேன்,  கேளுங்கள்',  என்று  கூறுகிறார். 
திரு  அஷ்டாக்ஷர  மந்த்ரமானது  அவ்வளவு  உயர்ந்தது...!  ஏன்..?  எவ்வாறு..?  ஏனெனில்,  அம்மந்த்ரம்  ஸ்ரீமந்  நாராயணனாலேயே  உபதேசிக்கப்  பட்டது...!  மந்திரங்களுக்குள்  தலைசிறந்ததாகக்  கூறப்பட்டுள்ளது...!  இம்மந்திரம்,  திருமங்கை  ஆழ்வாருக்கு,  பகவானால்  உபதேசிக்கப்பட்டது..!  அவர்,  தன்  பெரிய  திருமொழியில்  'குலம்  தரும்  செல்வந்  தந்திடும்'  என்ற  பாசுரத்தில்  கீழ்வருமாறு  தெரிவிக்கிறார்;

" நாராயணா  என்ற  திருநாமத்தின்  மகிமையே  மகிமை..!   அது என்னவெல்லாம்  செய்யும்  தெரியுமா..?  தன்னை  வணங்குபவர்க்கு   உயர்ந்த  கதியைத்  தரும்;  பெரும்  செல்வத்தைக்  கொடுக்கும்;  தன்  அடியவர்களின்  துன்பங்களை  ஒன்றுமில்லாமல்  செய்து  விடும்;  மேலான  பரமபதத்தை  அளிக்கும்;  நாம்  எடுத்த  காரியங்களில்  வெற்றியையே  கொடுக்கும்;  நாம்  விரும்பும்  நன்மைகளைத்  தரும்;  பெற்றெடுத்த  தாயை   விட,  நமக்கு  நல்லதையே  செய்யும்;  இவ்வாறான,  நன்மைகளையே  தரும்  'நாராயணா'  என்னும்  திருமந்திரத்தை  நான்  இன்று  கண்டு கொண்டேன்...!'

Sunday, March 11, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 17

ஹே  லோகா:  ச்ருணுத  ப்ரஸுதி மரணவ்யாதே  ஸ்கித்ஸாமிமாம்
யோகஜ்ஞா: ஸமுதாஹரந்தி முநயோ:யாம் யாஜ்ஞவல்க்யாதய: /
அந்தர்  ஜ்யோதிரமேயமேக  மம்ருதம்  க்ருஷ்ணாக்யமாபீயதாம்  
தத்பீதம்    பரமௌஷதம்   விதநுதே    நிர்வாண   மாத்யந்திகம்   // 

ஹே  உலக  மக்களே...!   நான்  சொல்வதைக்  கேளுங்கள்...!
பிறப்பு,  இறப்பு  என்று  தொடரும்  நோய்க்கு  
'யாஜ்ஞவல்க்யர்'  போன்ற  யோகமறிந்த  மகரிஷிகள்  நமக்கு  உரைக்கும்  மருந்து  இதுவே...!   அனைவருக்கும்  உள்ளே,  ஜ்யோதி  ஸ்வரூபனாகவும்,  அளவிட  முடியாததும்,  அந்தர்யாமியாகவும்  விளங்கும்  பகவான்  'ஸ்ரீ  கிருஷ்ணன்'  ஒருவனே  அந்த  மருந்து...!   இந்த   'ஸ்ரீ கிருஷ்ண'  என்ற   அம்ருதத்தை  அருந்தினால்,  இறுதியானதும்  நிலையானதுமான  மோக்ஷ  சுகத்தை  அடையலாம்...!  ஆகையால்,  இந்த  'ஸ்ரீ கிருஷ்ண'  மருந்தை  அனைவரும்  அருந்தினால்  பிறவிப்  பிணியிலிருந்து  விடுபடுவோம்...! 


(குலசேகரரின்  மிகவும்  அற்புதமான ஸ்லோகம் இது...! பிறப்பு இறப்பு என்பதையே பிணியாகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையே மருந்தாகவும் உரைக்கும் ஸ்லோகம்...! 

பகவான்  நம்  ஒவ்வொருவருக்கு  உள்ளேயும்  ஜ்யோதிமயமான   'அந்தர்யாமியாக'  உள்ளார்...!  அவனை  எவ்வாறு  த்யானிப்பது...!  அவன்  எப்படி   இருப்பான்..?    இதை  'தைத்திரிய  ஆரண்யகத்தில்'  உள்ள  'நாராயண  ஸூக்தம்'  அழகாக  விளக்குகிறது. 

"நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணுபமா... தஸ்யா ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ பிரம்ம  ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட் "
"கரு மேகத்தின்  நடுவே  திடீரென  ஒளி  வீசுகின்ற  மின்னல்  கீற்றைப்  போலவும்,  நெல்லின்  முளை  போன்று  மிகவும்  மெல்லியதாகவும்,  பொன்னைப்  போன்ற  நிறத்துடன்,  அணுவிலும்  நுண்ணியதாகவும்,  அந்த  ஆன்மாவானது  பிரகாசித்துக்  கொண்டிருக்கிறது.....  அந்த  சுடரின்  நடுவே,  இறைவன்  பரமாத்வாக,  அந்தர்யாமியாக  வீற்றிருக்கிறார்...!  அவரே  பிரம்மா,  அவரே  சிவன்,  அவரே  விஷ்ணு,  அவரே  இந்திரன்...!  அவர்  அழிவில்லாதவர்...!  ஸ்வயம்  பிரகாசத்துடன்  விளங்குபவர்...!  தனக்கு  ஒப்பாகவோ,  மேலாகவோ  யாரும்  இல்லாதவர்...! "  என்று விளக்குகிறது. 

ஜீவாத்மா  என்பது  மிகவும்  நுண்மையானது...! சுய  ஒளியுடன்  பிரகாசிப்பது...!  என்று  உபநிஷதங்கள்  கூறுகின்றன. 

"நூற்றுக்கணக்காகப்  பிளந்த  முடியின்  ஒரு  பங்கு  அளவை  உடையது..." என்று  'ஸ்வேதாசுவரத  உபநிஷதம்'  கூறுகிறது.

"அது  அணுவைப்  போல  நுட்பமானது..."  என்று  'முண்டக உபநிஷதம்'  கூறுகிறது.  

நுண்மையானது  என்றாலே,  மனம்,  வாக்கு,  புலன்களுக்கு  எட்டாத  ஒன்று  என்பதாகும்...!  உண்மையான  த்யானம்  என்பது  ஏதோ  வெளியில்  உள்ள  பொருளையோ,  உருவத்தையோ  த்யானிப்பது  அல்ல...!  மனத்தை  உள்முகமாகத்  திருப்பி,  நம்முள்  உறையும்  அந்தர்யாமியான  பகவானை  த்யாநிப்பதே  ஆகும்.
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 16 
 
ஜிஹ்வே     கீர்த்தய     கேஸவம்     முரரிபும்     சேதோ     பஜ     ஸ்ரீ     தரம்    
பாணித்வந்த்வ  ஸமர்ச்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வயத்வம்  ஸ்ருணு /
க்ருஷ்ணம்   லோகைய  லோசன  த்வய  ஹரேர்  கச்சாங்க்ரி  யுக்மாலயம்
ஜிக்ர   க்ராண  முகுந்த  பாத  துளஸீம்   மூர்த்தந்   நமாதோக்ஷஜம்    //    


நாக்கே...!  எம்பெருமானான  ஸ்ரீ கேசவனை  பாடித் துதிப்பாயாக...!
  
மனமே...!  முரன்  என்ற  அசுரனை அழித்தவனான  ஸ்ரீ முராரியை  பஜிப்பாயாக...! 

கைகளே...!  லக்ஷ்மி  காந்தனான  ஸ்ரீதரனுக்கு  அர்ச்சிப்பாயாக...!   
காதுகளே..!  ஸ்ரீ  அச்சுதனின்  திவ்ய  சரிதங்களையும்,  லீலைகளையும்  கேட்பாயாக...!
 
கண்களே...!  பகவான்  ஸ்ரீ  க்ருஷ்ணனின்  தாமரைத்  திருமுகத்தைப்  பார்ப்பாயாக...!
 
கால்களே...!  பாவங்களை  போக்கும்  ஸ்ரீ ஹரியின்  திருக்கோவிலுக்குச்  செல்வாயாக...!
 
மூக்கே...!  ஸ்ரீ முகுந்தனின்  பாதாரவிந்தங்களில்  அர்ச்சிக்கப்பட்டிருக்கும்  துளசியை  முகர்வாயாக... !
 
தலையே...!   ஸ்ரீமந்  நாராயணனை  வணங்குவாயாக...!  


( நாம்  இந்த  உடல்  பெற்ற  பயன்  இறைவனை  அடைவதற்கே...!  வேதம்  மனிதருக்கு  விதிக்கப்பட்டுள்ள  ஆயுட்காலம்  நூறு  என்கிறது.  தொண்டரடிப்பொடி  ஆழ்வார்  தமது  'திருமாலை'ப்  பாசுரத்தில், " மனிதனின்  நூறு  ஆண்டு  வாழ்க்கையில்  பாதி,  அதாவது  ஐம்பது  வருடங்கள்,  தூக்கத்திலேயே  கழிகின்றன...!  ஏதும் அறியா  குழந்தைப்  பருவம்  மற்றும்  அறியாமையினால்  பதினைந்து  ஆண்டுகள்  கழிந்து விடும்...!  மீதி  இருப்பதோ  முப்பத்தைந்து  ஆண்டுகள்...!  இதுவும்,  பசி,  நோய்,  முதுமை  ஆகியவற்றால்  கழிந்து விடும்...!  இப்படி  நூறு  ஆண்டுகள்  வாழ்ந்தாலும்,  நம்முடைய  பிறவியானது  எந்த  பயனும்  இல்லாமலேயே  கழிகிறது...!  எனவே,  எம்பெருமானே..!  நான்  இந்த  உலகில்  பிறவி  எடுப்பதையே  விரும்பவில்லை..! "  என்கிறார். 

இக்காலத்தில்,  ஒரு  சிலரே  நூறாண்டு  காலம்  வாழ்கின்றனர்...!  ஆதலால்,  அனைவரின்  ஆயுட்காலமும்  குறுகியே  உள்ளது...!  இதில்,  இறைவனுடைய  நினைப்பே  இல்லாதபடி,  பலரும்  சிற்றின்பங்களிலும்,  உலகியல்  விஷயங்களிலுமே  நாட்டம்  கொண்டு,  வாழ்நாளை  மேலும்  வீணாக்குகின்றனர்...!  முதலிலேயே  கூறியது  போல்,  மனமே  எல்லாவற்றுக்கும்  காரணமாக  அமைகிறது.  கட்டவிழ்த்து  விடப்பட்ட  குதிரைகள்  தறி கெட்டு  ஓடுவதைப் போல,  நம்  வசப்படாத  புலன்களும்  இவ்வுலக  கவர்ச்சிகளிலும்,  கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலுமே  நாட்டம்  கொண்டு  அவைகளையே  மேலும்  மேலும்  அடைய  விரும்புகின்றன. 

ஆசைகளைத்  அறவே  தவிர்க்க  முடியாது.  ஆசைப்படாத  மனிதன்  இவ்வுலகில்  இல்லை.  அவதார  புருஷர்களாலும்,  ஜீவன்  முக்தர்களாலும்,  பெரிய  மகான்களாலும்  மட்டுமே  இவ்வாறு  இருக்க  இயலும். 

ஸ்ரீ கிருஷ்ணர்,  கீதையில் (3.38) 
'தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதாதர்ஸோ மலேன ச 
யதோல்பேனாவ்ருதோ கர்ப: ததா தேனேதமாவ்ருதம்',
'நெருப்பு  புகையாலும்,  கண்ணாடி  அழுகினாலும்,  கருவானது  கர்பப்  பையினாலும்  எப்படி  மூடப்பட்டிருக்கிறதோ,  அவ்வாறே  அறிவும்  ஆசையால்  மூடப்பட்டிருக்கிறது',  என்கிறார்.  
 ஆசைகள்  அறிவை  மறைக்கிறது..!  ஆசையினால்  உந்தப்பட்டவன்,  அறிவுபூர்வமாகச்  சிந்திக்கவோ,  செயல்படவோ  முடிவதில்லை.  அதனால்,  அளவில்லாமல்  ஆசைப்படுகிறான்;  அடைய  முடியாதவற்றுக்கு  ஆசைப்படுகிறான்;  பின்  பல  பிரச்சனைகளுக்கு  ஆளாகிறான்..!  ஆசைக்கு  அளவோ,  முடிவோ  இருப்பதில்லை..!  ஒன்று கிடைத்தால்,  பத்து வேண்டும்  என்ற  ஆசை;  பின்  நூறு,  ஆயிரம்,  லட்சம்  என்று  நீண்டு கொண்டே  போகிறது...!அது  நம்மை  பற்பல  விதங்களில்  அலைக்கழிக்கிறது; பிறவித் தலையில்  மேலும்  சிக்க  வைத்து  விடுகிறது..!  

புலன்களைக்  கட்டுப்படுத்துவதால்  ஆசைகள்  கட்டுக்குள்  வரும்.  ஆதலால்,  புலன்களின்  போக்கினை  பகவானின்  மேல்  திருப்பி  விட  வேண்டும்.   ஐம்புலன்களையும்  மனதின்  கட்டுப்பாட்டில்  வைத்துக்கொள்ள  வேண்டும்.  மனத்தை,  விழிப்புற்ற  அறிவினால்,  சரியான  வழியில்  செல்லுமாறு  பார்த்துக்  கொள்ள வேண்டும்.  நம்  இந்திரியங்களை  பகவத்  கைங்கர்யங்களிலும்,  விஷயங்களிலும்,  அனுபவங்களிலும்  ஈடுபடுத்திக்  கொள்ள  நம்மை  பழக்கிக்  கொள்ள  வேண்டும்.  வீட்டில்  உள்ளோரையும்,   பிள்ளைகளையும்  அவ்வாறே  பழக்க  வேண்டும்.  சிறு  வயதிலேயே  மனதை  இறைவன்  மேல்  திருப்பும்  போது,  வளர  வளர,  மனமானது  அவனிடத்தில்  நிலை  கொள்கிறது.  
இதையே  குலசேகரர்  சென்ற  ஏழாம்  ஸ்லோகத்தில்  தெரிவித்தார்.
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 15


மாத்ராக்ஷம்  க்ஷீண புண்யாந் க்ஷணமபி  பவதோ பக்தி  ஹீநாந்  பதாப்ஜே
மாஸ்ரௌஷம் ஸ்ராவ்ய பந்தம் தவசரித மபாஸ்ய அந்யதாக்யாநஜாதம் /
மாஸ்  மார்ஷம்  மாதவ   த்வாமபி   புவன   பதே   சேதஸா  பஹ்நு  வாநாந்
மாபூவம்  த்வத்ஸ  பர்யா   வ்யதிகர   ரஹிதோ   ஜன்ம   ஜன்மாந்தரேபி    // 


ஹே  லோகநாதா...!  ஹே  மாதவா...!இப்பிறவியிலும்  மற்ற  எந்த  பிறவிகளிலும்,  உன்  திருவடிகளை  தொழுது  பக்தி  செய்யாத  பாவிகளை  என்  கண்கள்  பார்க்கக்  கூடாது...!   உன்  திவ்ய  சரிதங்களையும்,  லீலைகளையும்  தவிர,  வேறு  உலகக்  கதைகளை  என்  காதுகள்  கேட்கக்  கூடாது...!  உன்னை  வெறுப்பவர்களை,  என்  மனம்  நினைக்கக்   கூடாது...!   நான்   என்றென்றும்   உனக்குப்   பூஜை  செய்யாதவனாக   இருக்கக்  கூடாது...!     


(தீய  எண்ணமும்,  நடத்தையும்  உள்ளவருடன்  வைக்கும்  நட்பு,  தீய  பலனையே  தரும்.  அது  நம்  மனதை  இறைவனிடம்  போக  விடாமல்,  நம்மை  நாமே  அழித்துக் கொள்ள  வழி  செய்கிறது.

இதனாலேயே,  சான்றோர்; 
'தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது' 
- என்று  கூறியுள்ளனர். 

நல்லோர்களுடன்  இணக்கமே   'சத் சங்கம்' எனப்படுகிறது.  இது  போன்ற  சத்  சங்கத்தினால்,  மனம்  தூய்மையடைகிறது;   நல்லெண்ணமே  மேலெழுகிறது;   நற் சிந்தனைகளால்,  நல்ல  செயல்களே  நடக்கிறது.   இறை  பக்திக்கு  தேவை  மனத்  தூய்மையே.  எவையெல்லாம்  தன் புலன்களுக்குக்  'கூடாது'  என்று  கூறிய  குலசேகரர்,  எது  'தேவை'  என்று அடுத்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். )