Holy Trinity

Holy Trinity

Thursday, March 29, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 27

மஜ்ஜந்மந:  பலமிதம்  மதுகைட  பாரே 
  மத்  ப்ரார்த்தநீய  மதநுக்ரஹ  ஏஷ  ஏவ /
த்வத்  ப்ருத்ய  ப்ருத்ய  பரிசாரக  ப்ருத்ய  ப்ருத்ய 
 ப்ருத்யஸ்ய ப்ருத்ய இதிமாம் ஸ்மர லோகநாத  //


மது,  கைடபன்  போன்ற  பயங்கர  அசுரர்களை  ஸம்ஹரித்தவனே...!  

அனைத்து  உலகங்களுக்கும்  தலைவனாக  விளங்கும்  இறைவா...! 
  
நான்  இந்த  ஜன்மம்  எடுத்ததற்கு  பலன்  உண்டாகில்  இது  ஒன்று  தான்...! 
 
நான்  உன்னிடம்  பிரார்த்தித்து,  நீ  எனக்கு  அருள  வேண்டியதும்  இது  ஒன்று  தான்...!  

பகவானே, உன்னுடைய  அடியார்க்கு  அடியார்,  அவர்க்கு  அடியார்  என்ற  வரிசையில்,  ஏழாவது  படியில்  இருக்கும்  ஒரு  சாதாரண  தொண்டனாக  என்னை   நீ   நினைத்துக்  கொள்ள  வேண்டும்...! 


[இக்கலியுகத்தில்,  நாம்  நேராக  இறைவனைப்  பற்றிக்கொள்வது  என்பது  மிகவும்  கடினமான  ஒன்றாகும்.  ஆனால்,  அவரது  அடியார்களான  பக்தர்களுக்கு  சேவை  செய்து,  இறைவனின்  அருளுக்கு  பாத்திரம்  ஆவது,  மிகவும்  மேலான  ஒன்றாகும்.  'அஹம்  பக்த  பராதீன',  'நான்  என்  பக்தர்களுக்கு  கட்டுண்டவன்',  என  பகவானே  'அம்பரீஷ  சரித்திரத்தில்'  திருவாய்  மலர்ந்தருளியுள்ளார்...!  விப்ர நாராயணர்  (தொண்டரடிப் பொடி ஆழ்வார்)  என்ற  மஹா  புருஷரே,  தன்னைப்   பகவானுடைய   தொண்டர்களின்  பாத  தூளியாகக்  கருதினார்...!

உண்மை  பக்தன்  எப்படி  இருப்பான்..?  அவனுடைய  குணங்கள்  யாவை..? 

'எங்கும்  நீக்கமற  நிறைந்தவரும்,  சர்வ  வல்லமை  படைத்தவரும்,  அந்தர்யாமியுமாய்  இருப்பவருமான  பகவானுடைய  திவ்ய  மங்கள  அவதாரங்களிலும்,  அவன்  அவதார  நிகழ்வுகளிலும்,  அவன்  லீலா  விநோதங்களிலும்,  அவன்  திருவாய்  மலர்ந்தருளிய  சொற்களிலும்,  கீதாசார்யனாக  அவன்  அருளிய  உபதேசங்களிலும்,  அவனுடைய  கல்யாண  குணங்களிலும்,  திவ்ய ப்ரபாவங்களிலும்,  எவன்  ஒருவன்  சிறிதும்  சந்தேகமின்றி  நம்பிக்கை  கொள்கிறானோ,  மற்றும்  இவற்றையெல்லாம்  தன்  மனக்  கண்களால்  பார்த்துப்  பார்த்துப்  பூரித்து  மகிழ்கிறானோ,  அவனே  உண்மை  'பக்தன்'  ஆவான்'. 

'அந்த  பக்தனானவன்,  அஹங்காரம் (நான்),  மமகாரம் (எனது),  விருப்பு-வெறுப்பு,  மகிழ்ச்சி-துயரம்,  காமம்-குரோதம்,  லாபம்-நஷ்டம்,  வெற்றி-தோல்வி,  புகழ்ச்சி-இகழ்ச்சி  போன்றவற்றில்  அகப்பட்டுக்  கொள்ளாமல்  ஒதுங்கி,  ஸம பாவனையும்,  நாவடக்கமும்,  மன சாந்தியும்  கொண்டவனாய்,  சத் சங்கம்  மற்றும்  ஜீவர்களிடத்தில்  கருணையும்,  பக்தர்களிடத்தில்  நட்புறவும்  உடையவனாய்  இருப்பான்'.   

அந்த  பக்தன்,  பகவானிடத்தில்  பரமப்  பிரேமை  (காதல்) கொண்டு,  பரம  காருண்யனாக  விளங்கும்  அவன்  ஒருவனே  தனக்கு  கதி,  உயர்ந்த  புகலிடம்,  தன்  உயிருக்கு  ஆதாரம்,  அனைத்தும்  அவனே  என்று  உறுதி  கொண்டு ,  அந்த  பகவானிடத்தில்  தன்  பொறுப்பை  ஒப்படைத்து,  அவன்  தனக்கு  விதித்ததை  மன  மகிழ்ச்சியுடன்,  சலனமில்லாமல்,  ஒரு  மனதுடன்  ஏற்றுக் கொள்கிறான்.  அவனே  'சரணாகதன்'  ஆவான்.   இவர்களையே,  பகவான்  ஸ்ரீ கிருஷ்ணர், கீதையில்  'எனக்கு  மிகவும்  பிரியமான  பக்தர்கள்'  என்று  கூறுகிறார். 

பகவான்  கூறியவற்றுள்  (மேலே கூறியபடி)  ஒரு  சிறிதேனும்  நம்  வாழ்க்கையில்  கடைபிடித்தால்  மட்டுமே  கடைத்தேற  முடியும். 

வெறும்  'சரணாகதி - சரணாகதி'  என்றும்,  'எல்லாம் இறைவன் விட்ட வழி'  என்றும்  வாயால்  கூறிக்கொண்டு,  வெளி வேஷத்துடன்,  தன்  உதட்டளவில் மந்திரமும்,  மனம்  முழுதும்  அப்பிக் கிடக்கும்  அழுக்குடன்  திரிவதால்  எவ்விதப்  பயனும்  ஏற்பட்டு  விடாது.  இதனால்  தான்,  'உள்  ஒன்று  வைத்துப்  புறம்  ஒன்று  பேசுவார்  உறவு  கலவாமை  வேண்டும்',  என்று பெரியவர்கள்  சொல்லி  வைத்துப்  போனார்கள்.  இவர்களைப்  போன்றவர்களுக்கு,  வெளியே  ஒரு  சிறிது  மரியாதையும்,  முன்னுரிமையும்  கிடக்கலாமே  ஒழிய,  பெரிதாக  ஒன்றும்  ஏற்பட்டு  விடாது.  இவ்வாறு  தன்னையும்,  பிறரையும்  ஏமாற்றிக்கொண்டு  திரிவதால்,  இவர்கள்  மேலும்  மேலும்  பாவங்களையே  சம்பாதித்துக்  கொள்கின்றனர்.  இவர்கள்  மீளா  துயர்  தரும்  நரகங்களில்  அகப்பட்டு,  மேன்மேலும்  பிறவிப்  பெருந் தளையில்  சிக்குண்டு  துக்கப்படுவதைத்   தவிர வேறு  வழியில்லை...!! ] 

No comments:

Post a Comment