Holy Trinity

Holy Trinity

Sunday, March 11, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 16 
 
ஜிஹ்வே     கீர்த்தய     கேஸவம்     முரரிபும்     சேதோ     பஜ     ஸ்ரீ     தரம்    
பாணித்வந்த்வ  ஸமர்ச்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வயத்வம்  ஸ்ருணு /
க்ருஷ்ணம்   லோகைய  லோசன  த்வய  ஹரேர்  கச்சாங்க்ரி  யுக்மாலயம்
ஜிக்ர   க்ராண  முகுந்த  பாத  துளஸீம்   மூர்த்தந்   நமாதோக்ஷஜம்    //    


நாக்கே...!  எம்பெருமானான  ஸ்ரீ கேசவனை  பாடித் துதிப்பாயாக...!
  
மனமே...!  முரன்  என்ற  அசுரனை அழித்தவனான  ஸ்ரீ முராரியை  பஜிப்பாயாக...! 

கைகளே...!  லக்ஷ்மி  காந்தனான  ஸ்ரீதரனுக்கு  அர்ச்சிப்பாயாக...!   
காதுகளே..!  ஸ்ரீ  அச்சுதனின்  திவ்ய  சரிதங்களையும்,  லீலைகளையும்  கேட்பாயாக...!
 
கண்களே...!  பகவான்  ஸ்ரீ  க்ருஷ்ணனின்  தாமரைத்  திருமுகத்தைப்  பார்ப்பாயாக...!
 
கால்களே...!  பாவங்களை  போக்கும்  ஸ்ரீ ஹரியின்  திருக்கோவிலுக்குச்  செல்வாயாக...!
 
மூக்கே...!  ஸ்ரீ முகுந்தனின்  பாதாரவிந்தங்களில்  அர்ச்சிக்கப்பட்டிருக்கும்  துளசியை  முகர்வாயாக... !
 
தலையே...!   ஸ்ரீமந்  நாராயணனை  வணங்குவாயாக...!  


( நாம்  இந்த  உடல்  பெற்ற  பயன்  இறைவனை  அடைவதற்கே...!  வேதம்  மனிதருக்கு  விதிக்கப்பட்டுள்ள  ஆயுட்காலம்  நூறு  என்கிறது.  தொண்டரடிப்பொடி  ஆழ்வார்  தமது  'திருமாலை'ப்  பாசுரத்தில், " மனிதனின்  நூறு  ஆண்டு  வாழ்க்கையில்  பாதி,  அதாவது  ஐம்பது  வருடங்கள்,  தூக்கத்திலேயே  கழிகின்றன...!  ஏதும் அறியா  குழந்தைப்  பருவம்  மற்றும்  அறியாமையினால்  பதினைந்து  ஆண்டுகள்  கழிந்து விடும்...!  மீதி  இருப்பதோ  முப்பத்தைந்து  ஆண்டுகள்...!  இதுவும்,  பசி,  நோய்,  முதுமை  ஆகியவற்றால்  கழிந்து விடும்...!  இப்படி  நூறு  ஆண்டுகள்  வாழ்ந்தாலும்,  நம்முடைய  பிறவியானது  எந்த  பயனும்  இல்லாமலேயே  கழிகிறது...!  எனவே,  எம்பெருமானே..!  நான்  இந்த  உலகில்  பிறவி  எடுப்பதையே  விரும்பவில்லை..! "  என்கிறார். 

இக்காலத்தில்,  ஒரு  சிலரே  நூறாண்டு  காலம்  வாழ்கின்றனர்...!  ஆதலால்,  அனைவரின்  ஆயுட்காலமும்  குறுகியே  உள்ளது...!  இதில்,  இறைவனுடைய  நினைப்பே  இல்லாதபடி,  பலரும்  சிற்றின்பங்களிலும்,  உலகியல்  விஷயங்களிலுமே  நாட்டம்  கொண்டு,  வாழ்நாளை  மேலும்  வீணாக்குகின்றனர்...!  முதலிலேயே  கூறியது  போல்,  மனமே  எல்லாவற்றுக்கும்  காரணமாக  அமைகிறது.  கட்டவிழ்த்து  விடப்பட்ட  குதிரைகள்  தறி கெட்டு  ஓடுவதைப் போல,  நம்  வசப்படாத  புலன்களும்  இவ்வுலக  கவர்ச்சிகளிலும்,  கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலுமே  நாட்டம்  கொண்டு  அவைகளையே  மேலும்  மேலும்  அடைய  விரும்புகின்றன. 

ஆசைகளைத்  அறவே  தவிர்க்க  முடியாது.  ஆசைப்படாத  மனிதன்  இவ்வுலகில்  இல்லை.  அவதார  புருஷர்களாலும்,  ஜீவன்  முக்தர்களாலும்,  பெரிய  மகான்களாலும்  மட்டுமே  இவ்வாறு  இருக்க  இயலும். 

ஸ்ரீ கிருஷ்ணர்,  கீதையில் (3.38) 
'தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதாதர்ஸோ மலேன ச 
யதோல்பேனாவ்ருதோ கர்ப: ததா தேனேதமாவ்ருதம்',
'நெருப்பு  புகையாலும்,  கண்ணாடி  அழுகினாலும்,  கருவானது  கர்பப்  பையினாலும்  எப்படி  மூடப்பட்டிருக்கிறதோ,  அவ்வாறே  அறிவும்  ஆசையால்  மூடப்பட்டிருக்கிறது',  என்கிறார்.  
 ஆசைகள்  அறிவை  மறைக்கிறது..!  ஆசையினால்  உந்தப்பட்டவன்,  அறிவுபூர்வமாகச்  சிந்திக்கவோ,  செயல்படவோ  முடிவதில்லை.  அதனால்,  அளவில்லாமல்  ஆசைப்படுகிறான்;  அடைய  முடியாதவற்றுக்கு  ஆசைப்படுகிறான்;  பின்  பல  பிரச்சனைகளுக்கு  ஆளாகிறான்..!  ஆசைக்கு  அளவோ,  முடிவோ  இருப்பதில்லை..!  ஒன்று கிடைத்தால்,  பத்து வேண்டும்  என்ற  ஆசை;  பின்  நூறு,  ஆயிரம்,  லட்சம்  என்று  நீண்டு கொண்டே  போகிறது...!அது  நம்மை  பற்பல  விதங்களில்  அலைக்கழிக்கிறது; பிறவித் தலையில்  மேலும்  சிக்க  வைத்து  விடுகிறது..!  

புலன்களைக்  கட்டுப்படுத்துவதால்  ஆசைகள்  கட்டுக்குள்  வரும்.  ஆதலால்,  புலன்களின்  போக்கினை  பகவானின்  மேல்  திருப்பி  விட  வேண்டும்.   ஐம்புலன்களையும்  மனதின்  கட்டுப்பாட்டில்  வைத்துக்கொள்ள  வேண்டும்.  மனத்தை,  விழிப்புற்ற  அறிவினால்,  சரியான  வழியில்  செல்லுமாறு  பார்த்துக்  கொள்ள வேண்டும்.  நம்  இந்திரியங்களை  பகவத்  கைங்கர்யங்களிலும்,  விஷயங்களிலும்,  அனுபவங்களிலும்  ஈடுபடுத்திக்  கொள்ள  நம்மை  பழக்கிக்  கொள்ள  வேண்டும்.  வீட்டில்  உள்ளோரையும்,   பிள்ளைகளையும்  அவ்வாறே  பழக்க  வேண்டும்.  சிறு  வயதிலேயே  மனதை  இறைவன்  மேல்  திருப்பும்  போது,  வளர  வளர,  மனமானது  அவனிடத்தில்  நிலை  கொள்கிறது.  
இதையே  குலசேகரர்  சென்ற  ஏழாம்  ஸ்லோகத்தில்  தெரிவித்தார்.

No comments:

Post a Comment