Holy Trinity

Holy Trinity

Sunday, March 11, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 17

ஹே  லோகா:  ச்ருணுத  ப்ரஸுதி மரணவ்யாதே  ஸ்கித்ஸாமிமாம்
யோகஜ்ஞா: ஸமுதாஹரந்தி முநயோ:யாம் யாஜ்ஞவல்க்யாதய: /
அந்தர்  ஜ்யோதிரமேயமேக  மம்ருதம்  க்ருஷ்ணாக்யமாபீயதாம்  
தத்பீதம்    பரமௌஷதம்   விதநுதே    நிர்வாண   மாத்யந்திகம்   // 

ஹே  உலக  மக்களே...!   நான்  சொல்வதைக்  கேளுங்கள்...!
பிறப்பு,  இறப்பு  என்று  தொடரும்  நோய்க்கு  
'யாஜ்ஞவல்க்யர்'  போன்ற  யோகமறிந்த  மகரிஷிகள்  நமக்கு  உரைக்கும்  மருந்து  இதுவே...!   அனைவருக்கும்  உள்ளே,  ஜ்யோதி  ஸ்வரூபனாகவும்,  அளவிட  முடியாததும்,  அந்தர்யாமியாகவும்  விளங்கும்  பகவான்  'ஸ்ரீ  கிருஷ்ணன்'  ஒருவனே  அந்த  மருந்து...!   இந்த   'ஸ்ரீ கிருஷ்ண'  என்ற   அம்ருதத்தை  அருந்தினால்,  இறுதியானதும்  நிலையானதுமான  மோக்ஷ  சுகத்தை  அடையலாம்...!  ஆகையால்,  இந்த  'ஸ்ரீ கிருஷ்ண'  மருந்தை  அனைவரும்  அருந்தினால்  பிறவிப்  பிணியிலிருந்து  விடுபடுவோம்...! 


(குலசேகரரின்  மிகவும்  அற்புதமான ஸ்லோகம் இது...! பிறப்பு இறப்பு என்பதையே பிணியாகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையே மருந்தாகவும் உரைக்கும் ஸ்லோகம்...! 

பகவான்  நம்  ஒவ்வொருவருக்கு  உள்ளேயும்  ஜ்யோதிமயமான   'அந்தர்யாமியாக'  உள்ளார்...!  அவனை  எவ்வாறு  த்யானிப்பது...!  அவன்  எப்படி   இருப்பான்..?    இதை  'தைத்திரிய  ஆரண்யகத்தில்'  உள்ள  'நாராயண  ஸூக்தம்'  அழகாக  விளக்குகிறது. 

"நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணுபமா... தஸ்யா ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ பிரம்ம  ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட் "
"கரு மேகத்தின்  நடுவே  திடீரென  ஒளி  வீசுகின்ற  மின்னல்  கீற்றைப்  போலவும்,  நெல்லின்  முளை  போன்று  மிகவும்  மெல்லியதாகவும்,  பொன்னைப்  போன்ற  நிறத்துடன்,  அணுவிலும்  நுண்ணியதாகவும்,  அந்த  ஆன்மாவானது  பிரகாசித்துக்  கொண்டிருக்கிறது.....  அந்த  சுடரின்  நடுவே,  இறைவன்  பரமாத்வாக,  அந்தர்யாமியாக  வீற்றிருக்கிறார்...!  அவரே  பிரம்மா,  அவரே  சிவன்,  அவரே  விஷ்ணு,  அவரே  இந்திரன்...!  அவர்  அழிவில்லாதவர்...!  ஸ்வயம்  பிரகாசத்துடன்  விளங்குபவர்...!  தனக்கு  ஒப்பாகவோ,  மேலாகவோ  யாரும்  இல்லாதவர்...! "  என்று விளக்குகிறது. 

ஜீவாத்மா  என்பது  மிகவும்  நுண்மையானது...! சுய  ஒளியுடன்  பிரகாசிப்பது...!  என்று  உபநிஷதங்கள்  கூறுகின்றன. 

"நூற்றுக்கணக்காகப்  பிளந்த  முடியின்  ஒரு  பங்கு  அளவை  உடையது..." என்று  'ஸ்வேதாசுவரத  உபநிஷதம்'  கூறுகிறது.

"அது  அணுவைப்  போல  நுட்பமானது..."  என்று  'முண்டக உபநிஷதம்'  கூறுகிறது.  

நுண்மையானது  என்றாலே,  மனம்,  வாக்கு,  புலன்களுக்கு  எட்டாத  ஒன்று  என்பதாகும்...!  உண்மையான  த்யானம்  என்பது  ஏதோ  வெளியில்  உள்ள  பொருளையோ,  உருவத்தையோ  த்யானிப்பது  அல்ல...!  மனத்தை  உள்முகமாகத்  திருப்பி,  நம்முள்  உறையும்  அந்தர்யாமியான  பகவானை  த்யாநிப்பதே  ஆகும்.

No comments:

Post a Comment