Holy Trinity

Holy Trinity

Tuesday, March 27, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //



ஸ்லோகம் - 23
ஸத்ருச்  சேதைக  மந்த்ரம்  ஸகலமுபநிஷத்  வாக்ய  ஸம்பூஜ்ய  மந்த்ரம்  
ஸம்ஸாரோத்தார   மந்த்ரம்   ஸமுபசிதஸ்   ஸங்க   நிர்யாண  மந்த்ரம்    //
ஸர்வைஸ்வர்யைக மந்த்ரம் வ்யஸநபுஜக ஸந்தஷ்ட ஸந்த்ராண மந்த்ரம்
ஜிஹ்வே  ஸ்ரீ க்ருஷ்ண  மந்த்ரம் ஜபஜப  ஸததம்  ஜந்ம  ஸாபல்ய மந்த்ரம் //

ஹே நாக்கே...!


ஸ்ரீ க்ருஷ்ண மந்திரத்தையே எப்போதும் ஜபித்துக்கொண்டே இரு...!  என்னென்றால்;


அந்த மந்திரம் நம்முடைய பகைவர்களை ஒழிக்கிறது...! 


உபநிஷத்துக்கள் அனைத்தும் இந்த மந்திரத்தையே போற்றுகின்றன...!  


இம்மந்திரம் நம்மை இந்தப்  பிறவியாகிய பெருங்கடலை சுலபமாக தாண்ட வைக்கிறது...! 


நாம் சிக்கித் தவிக்கும்  அக்ஞானமாகிய மாய இருளை இம்மந்திரம் அகற்றுகிறது...! 


இது நமக்கு அனைத்து செல்வங்களையும் அடைவிக்கிறது...!  


இந்த மந்திரம் பற்பல துன்பங்களாகிய பாம்புகளால் கடிக்கப்பட்டவர்களைக் காப்பாற்றுகிறது..! 


நாம் எடுத்த இப்பிறவியின் பயனை இம்மந்திரம் நமக்கு அருள்கிறது...!



(இந்த  ஸ்லோகத்தின்  மூலம்  இறைவனின்  நாம  மகிமையை  எடுத்துரைக்கிறார்  குலசேகரர்.  நாம  ஜபத்தின்  மகிமைகளை  பற்பல  பெரியோர்கள்  எடுத்துரைத்துள்ளனர். 


திருமங்கை ஆழ்வாரும்  தன்  'பெரிய  திருமொழியில்' (1-1-9) 


"குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார் 
படுதுயராயின வெல்லாம்
நிலந்தரஞ் செய்யும் நீள்விசும்பருளும் 
அருளொடு பெருநிலம் அளிக்கும்
வலந்தரும் மற்றும் தந்திடும் பெற்ற 
தாயினும் ஆயின செய்யும்
நலந்தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் 
நாராயணா என்னும் நாமம்..! "

" நாராயணா  என்ற  திருநாமத்தின்  மகிமையே  மகிமை..!   அது என்னவெல்லாம்  செய்யும்  தெரியுமா ?  தன்னை  வணங்குபவர்க்கு   உயர்ந்த  கதியைத்  தரும்;  பெரும்  செல்வத்தைக்  கொடுக்கும்;  தன்  அடியவர்களின்  துன்பங்களை  ஒன்றுமில்லாமல்  செய்து  விடும்;  மேலான  பரமபதத்தை  அளிக்கும்;  நாம்  எடுத்த  காரியங்களில்  வெற்றியையே  கொடுக்கும்;  நாம்  விரும்பும்  நன்மைகளைத்  தரும்;  பெற்றெடுத்த  தாயை   விட,  நமக்கு  நல்லதையே  செய்யும்;  இவ்வாறான,  நன்மைகளையே  தரும்  'நாராயணா'  என்னும்  திருமந்திரத்தை  நான்  இன்று  கண்டு கொண்டேன்.! ", என்று  கூறுகிறார்.

ஸ்ரீமத்  பாகவத  மஹா  புராணத்தில்,  பகவான்  ஸ்ரீமந்  நாராயணன்  தேவரிஷியான  நாரதரிடம், 
 "யத்ர  காயந்தி  மத்  பக்தோ  தத்ர  திஷ்டாமி", 
 "என்னுடைய  பக்தர்கள்  எங்கு  என்   நாம  சந்கீர்த்தனத்தைப்  பாடுகிறார்களோ,  அங்கு  நான்  இருக்கிறேன்",  
என்று  கூறுகிறார். 


மற்றொரு  ஸ்லோகமும்  பகவானின்  நாம  மகிமையினைப்  பற்றிக்  கூறுகிறது. 
"ஹரேர்  நாம  ஹரேர்  நாம  ஹரேர்  நாமைவ  கேவலம் - கலௌ 
 நாஸ்த்யேவ  நாஸ்த்யேவ  நாஸ்த்யேவ  கதிர்  அன்யதா "
"இந்தக்  கலியுகத்தில்,  ஹரி  நாமத்தைப்  பாடுவதைத்  தவிர,  வேறு  வழியில்லை",  என  மூன்று  முறை  அழுத்தமாகச்  சொல்லப்பட்டுள்ளது...!

" ஸ்ரீ  ராம  ராம  ராம  ராமேதி ",  என்ற  ஸ்லோகத்தில்,  'பகவான்  ஸ்ரீ  விஷ்ணுவுடைய  ஸஹஸ்ர  நாமங்களைப்  பாராயணம்  செய்வதும்,  'ராம'  என்ற  நாமத்தை  மும்முறை  உச்சரிப்பதும்  சமம்',  என  சிவ பெருமானே  பார்வதியிடம்  உரைக்கிறார்...! 

பக்த  பிரஹல்லாதனை  அனைத்து  கஷ்டங்களிளிருந்தும்  காத்தது,  "ஓம் நமோ  நாராயணாய"  என்ற  நாமமே...!  ஆஞ்சநேயருக்கு  பலத்தை  அளித்ததும்,  கடலைத்  தாண்ட  வைத்ததும்,  சீதா  பிராட்டியை  கண்டு  பிடிக்க உதவியதும்  சேது  பந்தனத்தை  கட்ட  உதவியதும்,  "ராம"  நாமமே...!

கம்பர்  தன்  ராமாயணத்தில்  'ராம'  நாமத்தைப்  பற்றி,
"நன்மையையும்  செல்வமும்  நாளும்  நல்குமே
திண்மையும்  பாவமும்  சிதைந்து  தேயுமே
ஜென்மமும்  மரணமும்  இன்றி  தீருமே
இம்மையே  ராமா  என்ற  இரண்டு  எழுத்தினால்",  என்று  பாடுகிறார்...!

No comments:

Post a Comment