Holy Trinity

Holy Trinity

Friday, April 20, 2012


(ஸ்ரீ குலசேகர ஆழ்வார், ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயில், காஞ்சிபுரம்)

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 40


யஸ்ய ப்ரியௌ ஸ்ருதிதரௌ கவிலோக வீரௌ
மித்ரே த்விஜன்ம வர பாரஸவா வபூதாம்  /
தேநாம்புஜாக்ஷ சரணாம்புஜ ஷட்பதேன
ராஜ்ஞா க்ருதா க்ருதிரியம் குலசேகரேண  //

தாமரை  இதழ்களைப்  போன்ற  கண்களையுடைய  எம்பெருமானான  ஸ்ரீ  க்ருஷ்ணனின்  திருவடித்  தாமரைகளின்  மீது  ஆழ்ந்த  பக்தி  பூண்ட  எந்த  குலசேகர  மன்னனுக்கு  கேள்வி  ஞானமுள்ளவர்களாகவும்,  சிறந்த  கவிகளாகவும்,  பெரும்  வீரர்களாகவும்,  அந்தண  மற்றும்  மிஸ்ர  குலத்தில்  பிறந்தவர்களான  ப்ரிய  நண்பர்கள்  இருவர்  இருந்தார்களோ,  அந்த  குலசேகர  மன்னனால்  இந்த  'முகுந்த மாலா'  ஸ்தோத்திரம்  இயற்றப்பட்டது. 


(இது  இந்த  ஸ்தோத்திரத்தின்  கடைசி  ஸ்லோகமாகும்.  இந்த  ஸ்லோகத்தின்  மூலம்  'முகுந்த  மாலா'  ஸ்தோத்திரம்  ஸ்ரீ  குலசேகர  மன்னனால்  இயற்றப்பட்டது  என்று  தெளிவு  படக்  கூறுகிறார். 

"மனமே..!! தன்னைவிட மேன்மை உடையவர் எவரும் இல்லை என்னும் படியும்; தன்னைவிட உயர்ந்த நலன்களை உடையவர் எவரும் இல்லை என்னும் படியும் உள்ளவர் எவரோ, அஞ்ஞானம் நீங்கப் பெற்ற தெளிந்த அறிவினை அருளும் வல்லமை உடையவர் எவரோ, தளர்விலா தேவர்களின் தலைவராக உள்ளவர் எவரோ, அத்தகைய பராக்ரமம் உடையவரின் ஒளி பொருந்தியதும், சரணடைந்த பக்தர்களின் துன்பத்தைப் போக்குவதுமான திருவடித் தாமரைகளை நாள்தோறும் பக்தியுடன் பணிந்து, அறியாமை என்னும் இருளிலிருந்து மீண்டு எழுவாயாக..!!" [திருவாய் மொழி 1-1-1 ] 

இந்த 'முகுந்த மாலை'யினை யாரெல்லாம் பக்தி சிரத்தையுடன் பாராயணம் செய்கிறார்களோ, அவர்கள் இக பர சுகங்களை அளிப்பவனான ஸ்ரீ முகுந்தனின் அருளால் விஷ்ணு பக்தியும், அனைத்து செல்வங்களும் பெற்று இன்புறுவர் என்று கூறி இத்துடன் என் சிறிய உரையையும் முடிக்கிறேன். மேலும், இந்த அரிய ஸ்தோத்திரத்தை அடியேன் மேற்கொள்ளக் காரணமாய் இருந்த நண்பர்களுக்கு அடியேனுடைய நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

அவன் அருள் இருந்தால் மட்டுமே அனைத்தும் முடியும் என்பதனால், கண்ணன் கழலிணையே பற்றி, அவன் கருணா கடாக்ஷத்தையே வேண்டுகிறேன்.  அடியேனுடைய மொழிப் பெயர்ப்பில் இருக்கும் நிறைகளைக் கொண்டாட அடியேனுக்கு எந்த உரிமையும் கிடையாது. இதிலுள்ள தவறுகளுக்கு நானே முழு பொறுப்பு. ஏதேனும் குற்றம் குறை இருப்பின் அன்பர்கள் கருணை கூர்ந்து சுட்டிக் காட்டினால் திருத்திக் கொள்ள அடியேன் சித்தமாயிருக்கிறேன். )


ஸ்ரீ ராமகிருஷ்ண திருவடிகளே சரணம்....!!!

No comments:

Post a Comment