Holy Trinity

Holy Trinity

Wednesday, March 14, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 19


ப்ருத்வி  ரேணுரணு:  பயாம்ஸி  கணிகா:  பல்கு  ஸ்புலிங்கோ  நலஸ்  
தேஜோ  நிஸ்வஸநம்  மருத்தநுதரம்  ரந்த்ரம்  ஸுஸூக்ஷ்மம்  நப:/
க்ஷுத்ரா    ருத்ர    பிதாமஹ   ப்ரப்ருதய:   கீடா:   ஸமஸ்தாஸ்   ஸுரா:  
த்ருஷ்டே   யத்ர   ஸ  தாவகோ   விஜயதே   பூமாவ   தூதாவதி:  //
   

பகவானே...!  உன்னுடைய  உன்னதமான  மகிமைகளையும்,  திவ்யமான  லீலைகளையும்  காணும்  போது,  இந்த  பூமியானது  மிகவும்  சிறிய  தூசி  போலவும்,  மொத்த  ஜலமும்  ஒரு  சிறு  துளி  போலவும்,  நெருப்பெல்லாம்   ஒரு  சிறு  பொறி  போலவும்,  காற்றானது  ஒரு  மூச்சுக்  காற்று  போலவும்,  ஆகாயமானது  சிறிய  துவாரம்  போலவும்  தோற்றமளிக்கிறது...!  ருத்திரன்,  பிரம்மன்   போன்ற   தேவர்கள்  அனைவரும்   சிறு   புழுக்கள்  போலவும்  தோற்றமளிக்கின்றனர்...!    இப்படிப்பட்ட   உனது   அளவு   கடந்த  மகிமையானது   வெற்றி   கொள்ளட்டும்...!  

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 18 

ஹே மர்த்யா:  பரமம்  ஹிதம்  ஸ்ருணுதவோ  வக்ஷ்யாமி  சங்க்ஷேபத:
ஸம்ஸாரார்ணவ  மாபதூர்மி பகுளம் ஸம் யக் ப்ரவிஷ்ய ஸ்திதா:/
நாநா  ஜ்யாத  மபாஸ்ய  சேதஸி  நமோ  நாராயணாயேத்யமும்     
மந்த்ரம்  ஸப்ரணவம்  ப்ரணாம  ஸஹிதம்  ப்ராவர்த்தயத்வம்  முஹு://


ஹே  மானிடர்களே...!  
எண்ணற்ற  ஆபத்துக்கள்  சூழ்ந்த  இந்த  பிறவிப்  பெருங்கடலில்  மூழ்கித்  தத்தளிக்கும்   உங்களுக்கு   மிகவும்   நன்மை   பயக்கும்  மேன்மையான   உபாயத்தைக்  கூறுகிறேன்;  கவனமாகக்  கேளுங்கள்...!   உலகத்தில்  உள்ள,  பலவிதமான  விஷயங்களையெல்லாம்  அறிந்து  கொள்வதை  விட்டு  விட்டு  'ஓம்'  என்னும்   பிரணாவாகாரத்துடன்   கூடிய   திரு அஷ்டாக்ஷரமாகிய  'ஓம் நமோ நாராயணாய'  என்ற   மந்திரத்தை  வணங்கி  மனதில்  ஜபம்  செய்து  கொண்டே  இருங்கள்...! 


( ஒருவருக்கு,  அவருக்குப்  பிடித்ததைச்  சொல்லுவது  என்பது  வேறு;  அவருக்கு  எது  நல்லதோ  அதைச்  சொல்லுவது  என்பது  வேறு...!  முதலாவது,  அவரைத்  திருப்திப்  படுத்துவதற்கு;  இரண்டாவது,  அவரை  நல்வழிப்  படுத்துவதற்கு...!  இங்கு,  குலசேகரர்  '
பரமம்  ஹிதம்   ஸ்ருணுதவோ  வக்ஷ்யாமி',  அதாவது 'மிகவும்  உயர்ந்த  நம்மையைக்   கூறுகிறேன்,  கேளுங்கள்',  என்று  கூறுகிறார். 
திரு  அஷ்டாக்ஷர  மந்த்ரமானது  அவ்வளவு  உயர்ந்தது...!  ஏன்..?  எவ்வாறு..?  ஏனெனில்,  அம்மந்த்ரம்  ஸ்ரீமந்  நாராயணனாலேயே  உபதேசிக்கப்  பட்டது...!  மந்திரங்களுக்குள்  தலைசிறந்ததாகக்  கூறப்பட்டுள்ளது...!  இம்மந்திரம்,  திருமங்கை  ஆழ்வாருக்கு,  பகவானால்  உபதேசிக்கப்பட்டது..!  அவர்,  தன்  பெரிய  திருமொழியில்  'குலம்  தரும்  செல்வந்  தந்திடும்'  என்ற  பாசுரத்தில்  கீழ்வருமாறு  தெரிவிக்கிறார்;

" நாராயணா  என்ற  திருநாமத்தின்  மகிமையே  மகிமை..!   அது என்னவெல்லாம்  செய்யும்  தெரியுமா..?  தன்னை  வணங்குபவர்க்கு   உயர்ந்த  கதியைத்  தரும்;  பெரும்  செல்வத்தைக்  கொடுக்கும்;  தன்  அடியவர்களின்  துன்பங்களை  ஒன்றுமில்லாமல்  செய்து  விடும்;  மேலான  பரமபதத்தை  அளிக்கும்;  நாம்  எடுத்த  காரியங்களில்  வெற்றியையே  கொடுக்கும்;  நாம்  விரும்பும்  நன்மைகளைத்  தரும்;  பெற்றெடுத்த  தாயை   விட,  நமக்கு  நல்லதையே  செய்யும்;  இவ்வாறான,  நன்மைகளையே  தரும்  'நாராயணா'  என்னும்  திருமந்திரத்தை  நான்  இன்று  கண்டு கொண்டேன்...!'

Sunday, March 11, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 17

ஹே  லோகா:  ச்ருணுத  ப்ரஸுதி மரணவ்யாதே  ஸ்கித்ஸாமிமாம்
யோகஜ்ஞா: ஸமுதாஹரந்தி முநயோ:யாம் யாஜ்ஞவல்க்யாதய: /
அந்தர்  ஜ்யோதிரமேயமேக  மம்ருதம்  க்ருஷ்ணாக்யமாபீயதாம்  
தத்பீதம்    பரமௌஷதம்   விதநுதே    நிர்வாண   மாத்யந்திகம்   // 

ஹே  உலக  மக்களே...!   நான்  சொல்வதைக்  கேளுங்கள்...!
பிறப்பு,  இறப்பு  என்று  தொடரும்  நோய்க்கு  
'யாஜ்ஞவல்க்யர்'  போன்ற  யோகமறிந்த  மகரிஷிகள்  நமக்கு  உரைக்கும்  மருந்து  இதுவே...!   அனைவருக்கும்  உள்ளே,  ஜ்யோதி  ஸ்வரூபனாகவும்,  அளவிட  முடியாததும்,  அந்தர்யாமியாகவும்  விளங்கும்  பகவான்  'ஸ்ரீ  கிருஷ்ணன்'  ஒருவனே  அந்த  மருந்து...!   இந்த   'ஸ்ரீ கிருஷ்ண'  என்ற   அம்ருதத்தை  அருந்தினால்,  இறுதியானதும்  நிலையானதுமான  மோக்ஷ  சுகத்தை  அடையலாம்...!  ஆகையால்,  இந்த  'ஸ்ரீ கிருஷ்ண'  மருந்தை  அனைவரும்  அருந்தினால்  பிறவிப்  பிணியிலிருந்து  விடுபடுவோம்...! 


(குலசேகரரின்  மிகவும்  அற்புதமான ஸ்லோகம் இது...! பிறப்பு இறப்பு என்பதையே பிணியாகவும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையே மருந்தாகவும் உரைக்கும் ஸ்லோகம்...! 

பகவான்  நம்  ஒவ்வொருவருக்கு  உள்ளேயும்  ஜ்யோதிமயமான   'அந்தர்யாமியாக'  உள்ளார்...!  அவனை  எவ்வாறு  த்யானிப்பது...!  அவன்  எப்படி   இருப்பான்..?    இதை  'தைத்திரிய  ஆரண்யகத்தில்'  உள்ள  'நாராயண  ஸூக்தம்'  அழகாக  விளக்குகிறது. 

"நீல தோயத மத்யஸ்தா வித்யுல்லேகேவ பாஸ்வரா நீவார சூகவத் தன்வீ பீதா பாஸ்வத்யணுபமா... தஸ்யா ஷிகாயா மத்யே பரமாத்மா வ்யவஸ்தித: ஸ பிரம்ம  ஸ சிவ: ஸ ஹரி: ஸேந்த்ர: ஸோக்ஷர: பரம: ஸ்வராட் "
"கரு மேகத்தின்  நடுவே  திடீரென  ஒளி  வீசுகின்ற  மின்னல்  கீற்றைப்  போலவும்,  நெல்லின்  முளை  போன்று  மிகவும்  மெல்லியதாகவும்,  பொன்னைப்  போன்ற  நிறத்துடன்,  அணுவிலும்  நுண்ணியதாகவும்,  அந்த  ஆன்மாவானது  பிரகாசித்துக்  கொண்டிருக்கிறது.....  அந்த  சுடரின்  நடுவே,  இறைவன்  பரமாத்வாக,  அந்தர்யாமியாக  வீற்றிருக்கிறார்...!  அவரே  பிரம்மா,  அவரே  சிவன்,  அவரே  விஷ்ணு,  அவரே  இந்திரன்...!  அவர்  அழிவில்லாதவர்...!  ஸ்வயம்  பிரகாசத்துடன்  விளங்குபவர்...!  தனக்கு  ஒப்பாகவோ,  மேலாகவோ  யாரும்  இல்லாதவர்...! "  என்று விளக்குகிறது. 

ஜீவாத்மா  என்பது  மிகவும்  நுண்மையானது...! சுய  ஒளியுடன்  பிரகாசிப்பது...!  என்று  உபநிஷதங்கள்  கூறுகின்றன. 

"நூற்றுக்கணக்காகப்  பிளந்த  முடியின்  ஒரு  பங்கு  அளவை  உடையது..." என்று  'ஸ்வேதாசுவரத  உபநிஷதம்'  கூறுகிறது.

"அது  அணுவைப்  போல  நுட்பமானது..."  என்று  'முண்டக உபநிஷதம்'  கூறுகிறது.  

நுண்மையானது  என்றாலே,  மனம்,  வாக்கு,  புலன்களுக்கு  எட்டாத  ஒன்று  என்பதாகும்...!  உண்மையான  த்யானம்  என்பது  ஏதோ  வெளியில்  உள்ள  பொருளையோ,  உருவத்தையோ  த்யானிப்பது  அல்ல...!  மனத்தை  உள்முகமாகத்  திருப்பி,  நம்முள்  உறையும்  அந்தர்யாமியான  பகவானை  த்யாநிப்பதே  ஆகும்.
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 16 
 
ஜிஹ்வே     கீர்த்தய     கேஸவம்     முரரிபும்     சேதோ     பஜ     ஸ்ரீ     தரம்    
பாணித்வந்த்வ  ஸமர்ச்சயாச்யுதகதா: ஸ்ரோத்ரத்வயத்வம்  ஸ்ருணு /
க்ருஷ்ணம்   லோகைய  லோசன  த்வய  ஹரேர்  கச்சாங்க்ரி  யுக்மாலயம்
ஜிக்ர   க்ராண  முகுந்த  பாத  துளஸீம்   மூர்த்தந்   நமாதோக்ஷஜம்    //    


நாக்கே...!  எம்பெருமானான  ஸ்ரீ கேசவனை  பாடித் துதிப்பாயாக...!
  
மனமே...!  முரன்  என்ற  அசுரனை அழித்தவனான  ஸ்ரீ முராரியை  பஜிப்பாயாக...! 

கைகளே...!  லக்ஷ்மி  காந்தனான  ஸ்ரீதரனுக்கு  அர்ச்சிப்பாயாக...!   
காதுகளே..!  ஸ்ரீ  அச்சுதனின்  திவ்ய  சரிதங்களையும்,  லீலைகளையும்  கேட்பாயாக...!
 
கண்களே...!  பகவான்  ஸ்ரீ  க்ருஷ்ணனின்  தாமரைத்  திருமுகத்தைப்  பார்ப்பாயாக...!
 
கால்களே...!  பாவங்களை  போக்கும்  ஸ்ரீ ஹரியின்  திருக்கோவிலுக்குச்  செல்வாயாக...!
 
மூக்கே...!  ஸ்ரீ முகுந்தனின்  பாதாரவிந்தங்களில்  அர்ச்சிக்கப்பட்டிருக்கும்  துளசியை  முகர்வாயாக... !
 
தலையே...!   ஸ்ரீமந்  நாராயணனை  வணங்குவாயாக...!  


( நாம்  இந்த  உடல்  பெற்ற  பயன்  இறைவனை  அடைவதற்கே...!  வேதம்  மனிதருக்கு  விதிக்கப்பட்டுள்ள  ஆயுட்காலம்  நூறு  என்கிறது.  தொண்டரடிப்பொடி  ஆழ்வார்  தமது  'திருமாலை'ப்  பாசுரத்தில், " மனிதனின்  நூறு  ஆண்டு  வாழ்க்கையில்  பாதி,  அதாவது  ஐம்பது  வருடங்கள்,  தூக்கத்திலேயே  கழிகின்றன...!  ஏதும் அறியா  குழந்தைப்  பருவம்  மற்றும்  அறியாமையினால்  பதினைந்து  ஆண்டுகள்  கழிந்து விடும்...!  மீதி  இருப்பதோ  முப்பத்தைந்து  ஆண்டுகள்...!  இதுவும்,  பசி,  நோய்,  முதுமை  ஆகியவற்றால்  கழிந்து விடும்...!  இப்படி  நூறு  ஆண்டுகள்  வாழ்ந்தாலும்,  நம்முடைய  பிறவியானது  எந்த  பயனும்  இல்லாமலேயே  கழிகிறது...!  எனவே,  எம்பெருமானே..!  நான்  இந்த  உலகில்  பிறவி  எடுப்பதையே  விரும்பவில்லை..! "  என்கிறார். 

இக்காலத்தில்,  ஒரு  சிலரே  நூறாண்டு  காலம்  வாழ்கின்றனர்...!  ஆதலால்,  அனைவரின்  ஆயுட்காலமும்  குறுகியே  உள்ளது...!  இதில்,  இறைவனுடைய  நினைப்பே  இல்லாதபடி,  பலரும்  சிற்றின்பங்களிலும்,  உலகியல்  விஷயங்களிலுமே  நாட்டம்  கொண்டு,  வாழ்நாளை  மேலும்  வீணாக்குகின்றனர்...!  முதலிலேயே  கூறியது  போல்,  மனமே  எல்லாவற்றுக்கும்  காரணமாக  அமைகிறது.  கட்டவிழ்த்து  விடப்பட்ட  குதிரைகள்  தறி கெட்டு  ஓடுவதைப் போல,  நம்  வசப்படாத  புலன்களும்  இவ்வுலக  கவர்ச்சிகளிலும்,  கேளிக்கைகளிலும், கொண்டாட்டங்களிலுமே  நாட்டம்  கொண்டு  அவைகளையே  மேலும்  மேலும்  அடைய  விரும்புகின்றன. 

ஆசைகளைத்  அறவே  தவிர்க்க  முடியாது.  ஆசைப்படாத  மனிதன்  இவ்வுலகில்  இல்லை.  அவதார  புருஷர்களாலும்,  ஜீவன்  முக்தர்களாலும்,  பெரிய  மகான்களாலும்  மட்டுமே  இவ்வாறு  இருக்க  இயலும். 

ஸ்ரீ கிருஷ்ணர்,  கீதையில் (3.38) 
'தூமேனாவ்ரியதே வஹ்னிர் யதாதர்ஸோ மலேன ச 
யதோல்பேனாவ்ருதோ கர்ப: ததா தேனேதமாவ்ருதம்',
'நெருப்பு  புகையாலும்,  கண்ணாடி  அழுகினாலும்,  கருவானது  கர்பப்  பையினாலும்  எப்படி  மூடப்பட்டிருக்கிறதோ,  அவ்வாறே  அறிவும்  ஆசையால்  மூடப்பட்டிருக்கிறது',  என்கிறார்.  
 ஆசைகள்  அறிவை  மறைக்கிறது..!  ஆசையினால்  உந்தப்பட்டவன்,  அறிவுபூர்வமாகச்  சிந்திக்கவோ,  செயல்படவோ  முடிவதில்லை.  அதனால்,  அளவில்லாமல்  ஆசைப்படுகிறான்;  அடைய  முடியாதவற்றுக்கு  ஆசைப்படுகிறான்;  பின்  பல  பிரச்சனைகளுக்கு  ஆளாகிறான்..!  ஆசைக்கு  அளவோ,  முடிவோ  இருப்பதில்லை..!  ஒன்று கிடைத்தால்,  பத்து வேண்டும்  என்ற  ஆசை;  பின்  நூறு,  ஆயிரம்,  லட்சம்  என்று  நீண்டு கொண்டே  போகிறது...!அது  நம்மை  பற்பல  விதங்களில்  அலைக்கழிக்கிறது; பிறவித் தலையில்  மேலும்  சிக்க  வைத்து  விடுகிறது..!  

புலன்களைக்  கட்டுப்படுத்துவதால்  ஆசைகள்  கட்டுக்குள்  வரும்.  ஆதலால்,  புலன்களின்  போக்கினை  பகவானின்  மேல்  திருப்பி  விட  வேண்டும்.   ஐம்புலன்களையும்  மனதின்  கட்டுப்பாட்டில்  வைத்துக்கொள்ள  வேண்டும்.  மனத்தை,  விழிப்புற்ற  அறிவினால்,  சரியான  வழியில்  செல்லுமாறு  பார்த்துக்  கொள்ள வேண்டும்.  நம்  இந்திரியங்களை  பகவத்  கைங்கர்யங்களிலும்,  விஷயங்களிலும்,  அனுபவங்களிலும்  ஈடுபடுத்திக்  கொள்ள  நம்மை  பழக்கிக்  கொள்ள  வேண்டும்.  வீட்டில்  உள்ளோரையும்,   பிள்ளைகளையும்  அவ்வாறே  பழக்க  வேண்டும்.  சிறு  வயதிலேயே  மனதை  இறைவன்  மேல்  திருப்பும்  போது,  வளர  வளர,  மனமானது  அவனிடத்தில்  நிலை  கொள்கிறது.  
இதையே  குலசேகரர்  சென்ற  ஏழாம்  ஸ்லோகத்தில்  தெரிவித்தார்.
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 15


மாத்ராக்ஷம்  க்ஷீண புண்யாந் க்ஷணமபி  பவதோ பக்தி  ஹீநாந்  பதாப்ஜே
மாஸ்ரௌஷம் ஸ்ராவ்ய பந்தம் தவசரித மபாஸ்ய அந்யதாக்யாநஜாதம் /
மாஸ்  மார்ஷம்  மாதவ   த்வாமபி   புவன   பதே   சேதஸா  பஹ்நு  வாநாந்
மாபூவம்  த்வத்ஸ  பர்யா   வ்யதிகர   ரஹிதோ   ஜன்ம   ஜன்மாந்தரேபி    // 


ஹே  லோகநாதா...!  ஹே  மாதவா...!இப்பிறவியிலும்  மற்ற  எந்த  பிறவிகளிலும்,  உன்  திருவடிகளை  தொழுது  பக்தி  செய்யாத  பாவிகளை  என்  கண்கள்  பார்க்கக்  கூடாது...!   உன்  திவ்ய  சரிதங்களையும்,  லீலைகளையும்  தவிர,  வேறு  உலகக்  கதைகளை  என்  காதுகள்  கேட்கக்  கூடாது...!  உன்னை  வெறுப்பவர்களை,  என்  மனம்  நினைக்கக்   கூடாது...!   நான்   என்றென்றும்   உனக்குப்   பூஜை  செய்யாதவனாக   இருக்கக்  கூடாது...!     


(தீய  எண்ணமும்,  நடத்தையும்  உள்ளவருடன்  வைக்கும்  நட்பு,  தீய  பலனையே  தரும்.  அது  நம்  மனதை  இறைவனிடம்  போக  விடாமல்,  நம்மை  நாமே  அழித்துக் கொள்ள  வழி  செய்கிறது.

இதனாலேயே,  சான்றோர்; 
'தீயாரைக் காண்பதுவும் தீதே; திருவற்ற
தீயார் சொல் கேட்பதுவும் தீதே - தீயார்
குணங்கள் உரைப்பதுவும் தீதே; அவரோடு
இணங்கி இருப்பதுவும் தீது' 
- என்று  கூறியுள்ளனர். 

நல்லோர்களுடன்  இணக்கமே   'சத் சங்கம்' எனப்படுகிறது.  இது  போன்ற  சத்  சங்கத்தினால்,  மனம்  தூய்மையடைகிறது;   நல்லெண்ணமே  மேலெழுகிறது;   நற் சிந்தனைகளால்,  நல்ல  செயல்களே  நடக்கிறது.   இறை  பக்திக்கு  தேவை  மனத்  தூய்மையே.  எவையெல்லாம்  தன் புலன்களுக்குக்  'கூடாது'  என்று  கூறிய  குலசேகரர்,  எது  'தேவை'  என்று அடுத்த ஸ்லோகத்தில் தெரிவிக்கிறார். )
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 14

த்ருஷ்ணா தோயே மதந பவநோத்தூத மோஹோர்மி மாலே
தாராவர்த்தே  தநய  ஸஹஜ  க்ராஹ  ஸங்காகுலே  ச /
ஸம்ஸாராக்யே மஹதி ஜலதௌ  மஜ்ஜதாம்  நஸ்த்ரி தாமந்
பாதாம்போஜே  வரத பவதோ  பக்திநாவம்  ப்ரயச்ச //



ஸம்சார   வாழ்க்கையே   ஒரு   ஆழப்   பெருங்கடல்...!   இக்கடலில்,  பேராசையே   தண்ணீர்   ஆகும்...!   அதில்,  காமத்தினால்  (சிற்றின்பத்தால்)   உண்டாகும்  மன மயக்கமே  காற்றினால்  உந்தப்பட்டு  மேலே  ஏழும்  பேரலைகளின்  தொடராகும்...!  இது  மனைவி  (அல்லது கணவன்)  என்ற  நீர்ச் சுழலினாலும்;  மக்கள்,  உடன்  பிறப்புக்கள்,  உறவினர்கள்  என்ற முதலைக்  கூட்டங்களாலும்,  கலங்கிப்  போய்  உள்ளது...!  இந்த  பயங்கரமான  ஸம்சாரக்  கடலில்  மூழ்கித்  தத்தளிக்கும்  எங்களுக்கு,  ஹே..!  வரதா...!  த்ரிலோக  நாயகா...!  உன்  திருவடிகளை  அடைவதற்கு,  'பக்தி'  என்ற  படகைத்  தருவீராக...!


(உலக  மாயையில்  சிக்குண்ட  ஒரு  சாதாரண  மனிதனின்  நிலையே  மேலே கூறப்பட்டுள்ளது.  ஒருவனுடைய  மனமானது  ஆறு  பகைவர்களான  காமம் (ஆசை),  குரோதம்  (கோபம்),  லோபம் (பேராசை),  மோஹம் (மன மயக்கம்),  மதம் (தற் பெருமை),  மாத்சர்யம் ( பொறாமை)  ஆகியவற்றால்  பீடிக்கப்படுகிறது. 

கீதையில், ஸாங்கிய யோகத்தில்,  ஸ்ரீ கிருஷ்ணர்;

"த்யாயதோ விஷயான் பும்ஸ: ஸங்கஸ் தேஷுப ஜாயதே /
ஸங்காத் ஸஞ்ஜாயதே காம: காமத் க்ரோதோபிஜாயதே //
க்ரோதாத்பவதி ஸம்மோஹ: 
ஸம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம: /
ஸம்ருதி ப்ரம்சாத் புத்தி நசோ புத்தி நாசாத் ப்ரணஷ்யதி // (2.62/63)

"ஒருவன்  சாதாரண  உலகப்  பொருளை  நினைப்பதால்,  அவனுக்கு  அதன்  மீது  பற்று  ஏற்படுகிறது;  அந்த  பற்று  ஆசையாக  மாறுகிறது;  ஆசையால்  கோபம் 
(அந்தப்  பொருள்  கிடைக்காமல்  போகும்  போது)  எழுகிறது;  கோபத்தினால்  மன  மயக்கம்  ஏற்படுகிறது;  மன  மயக்கத்தால்  அவன்  சிந்திக்கும்  அறிவை  இழக்கிறான்;  அறிவை  இழந்ததும்,  பகுத்தறியும்  ஆற்றல்  போய்விடுகிறது;  புத்தியை  இழந்தவன்  தன்னைத் தானே  அழித்துக்  கொள்கிறான் "  என்று  தெரிவிக்கிறார்.

ஆசைகள்  மற்றும்  எண்ணங்கள்  ஆகியவற்றின்  தொகுப்பே  'மனம்'  ஆகும். இந்த  மனமே  எல்லாவற்றுக்கும்  காரணமாக  உள்ளது. 

விஷ்ணு  புராணத்தில், 
"மன  ஏவ  மனுஷ்யாணாம்  காரணம்  பந்த  மோக்ஷயோ:" 
என்று  கூறப்பட்டுள்ளது.  அதாவது, 
"ஒரு  மனிதனை  உலகில்  பந்தப்படுத்துவதும்,  பந்தத்திலிருந்து  விடுவிப்பதும்  அவனுடைய  மனம்  தான்".

உபநிஷத  வாக்கியமும், 
"மன  ஏவ  மஹா  ரிபு:  =  மனமே  மேலான  பகைவன்",  என்று  கூறுகிறது.

பற்று  வைப்பதைத்  தவிர்த்தலே  இன்றியமையாதது.  சுகத்தில்  நாட்டம்  கொள்ளாமல்,  துக்கத்தில்  துவளாமல்,  பற்று  பயம்  கோபம்  முதலியவற்றை  விட்டவனையே  'ஸ்தித புத்தி'  (விழிப்புற்ற அறிவு)  உடையவன்  என்று  கீதையில்  கிருஷ்ணர்  கூறுகிறார்.  அவன்  ஸுக,  துக்கங்களை  நாடுவதோ,  உணருவதே இல்லை. 

'ஸுகத்தில்  நாட்டம்  இல்லாதவன்'  என்றால்  எவ்வாறு  இருப்பான்..? 

அதை  ஸ்ரீ  ராமானுஜர்  தன்  ஸ்ரீ  பாஷ்யத்தில், 
"ப்ரியேஷு  ஸன்னிஹிதெஷு  அபி  நிஸ்ப்ருக: 
அவன்  விரும்பும்  பொருள்  அவனிடத்திலேயே  இருந்தாலும்,  அவற்றால் அவன்  கவரப்படுவதில்லை.

அனாகதேஷு  ஸ்ப்ருஹா  ராக:  தத்ரஹித:
கிடைக்காத  பொருளை  நினைத்து  அவன்  ஏங்குவதும்  இல்லை."  என்கிறார்.  எனவே,  அவனுக்கு  துக்கமும்  ஏற்படுவதில்லை. 
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 13
 
பவ   ஜலதி   மகாதம்   துஸ்தரம்   நிஸ்தரேயம்
கதமஹமிதி   சேதோ   மா   ஸ்ம   கா:   காதரத்வம்  /
ஸரஸிஜத்ருஷி   தேவே  தாவகி   பக்தி   ரேகா  
நரகபிதி   நிஷண்ணா   தாரயிஷ்யத்   யாவஸ்யம் // 

 மனமே...!  
பிறப்பு  இறப்பு  என்பதான  இந்த  'ஸம்ஸாரம்'  என்ற  கடலானது,  மிகவும்  ஆழமானது;  கரை  காண  இயலாதது;  கடக்க  முடியாதது...!   'இதனை  நான்  எவ்வாறு  கடப்பேன்'  என்று   நீ  பயப்பட  வேண்டியதில்லை...!   நரகாசுரனை அழித்த,   தாமரைக்   கண்ணனாகிய,   பகவான்   ஸ்ரீ   க்ருஷ்ணனிடத்தில் மாறாத   பக்தி   செய்வாயானால்,  அது   ஒன்றே   உன்னை   இந்த   பிறவிப்  பெருங்கடலைத்  தாண்ட  வைத்து  விடும்...!


( பகவானிடத்தில்  பக்தி  செய்வது  என்பது,  அவனுடைய  அருள்  இருந்தால் மட்டுமே  முடியும்..!   தகுந்த  குருவிடம்  தீக்ஷை  பெற்று,  அவருடைய  அருளுக்கு  பாத்திரமானால்  மட்டுமே,  இறைவனிடத்தில்  நம்மால்  பக்தி  செய்ய  இயலும்.  எதுவுமே  ஒரே  நாளில்  வந்து  விடுவதில்லை...!  எல்லாவற்றுக்கும்  பயிற்சியும்,  மன  ஈடுபாடும்  தேவை.  குருவின்  திருவருளால்,  மன  இருள்  நீங்குகின்றது...!  அஜ்ஞானம்  நீங்குவதால்,  ஞானம்  பிறக்கிறது...!  ஞானத்தினால்  விவேகம்  உண்டாகிறது...!  விவேகத்தின்   மூலம்   இவ்வுலகத்தில்   எது  உண்மை,   எது  பொய்  என்பது  புலப்படுகிறது...!   பிறகே,  அந்த  உண்மைப்  பொருளாக  விளங்கும்  எம்பெருமானிடத்தில்  பக்தி  பிறக்கிறது...!   மேலும்,  பகவானுடைய தாமரைத்  திருவடிகளில்  ஈர்ப்பும்;  திவ்ய  நாமங்களில்  சுவையும்;  அவன் எடுத்த   அவதாரங்களின்   லீலைகளையும்,   திவ்ய  மங்கள  வைபவங்களையும்,  கல்யாண  குணங்களையும்,  பராக்ரமங்களையும்,  பிரபாவங்களையும்,  கேட்கும்  போதும், பாடும்  போதும்,  படிக்கும்  போதும்,  நினைக்கும்  போதும்,  பக்தியானது  மேலும்  மேலும்  வளர்கிறது..!  

எடுத்த  எடுப்பிலேயே,  இறைவனிடத்தில்  மனத்தைச்  செலுத்துவது  என்பது  எல்லோராலும்  முடியக் கூடிய  காரியம்  அல்ல..!   ஆனால்,  இடைவிடாத  பயிற்சியினால்  இது  சாத்தியமாகிறது. 

ஸ்ரீ  கிருஷ்ணர்  தன்  கீதையில்,  பக்தி  யோகத்தில்;

"அப்யாஸ  யோகேன  ததோ  மாமிச்சாப்தும்  தனஞ்ஜய"  (12.9 )
"ஹே  
தனஞ்ஜய  (அர்ஜுனா)..!   இடை விடாத   பயிற்சியால்,  என்னிடம்  மனதை  செலுத்தி,  என்னை  அடைய  முயற்சி  செய்.."  என்கிறார்.
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 12
 
பவஜலதி     கதாநாம்    த்வந்த்வ    வாதாஹதாநாம்   
ஸுதது  ஹித்ரு  களத்ர  த்ராண   பாரார்த்திதாநாம்  /
விஷம   விஷய   தோயே   மஜ்ஜதா   மப்லாவாநாம்   
பவது ஸரண மேகோ விஷ்ணு போதோ நராணாம் //

பிறப்பு    இறப்பு   என்பது   தான்   'ஸம்சாரம்'   என்கிற   கடல்...!   இந்த   கரை  காண   முடியாத   ஸம்சாரக்   கடலில்   சிக்கித்   தவிக்கும்   மக்களைத்  தாக்கும்  'குளிரும்  வெப்பமும் '  வாழ்க்கையில்  அன்றாடம்  அனுபவிக்கும்   'இன்பமும்  துன்பமும்'   ஆகும்...!    இவர்களை,  'மனைவி,  மக்கள்,  உறவினர்கள்'  போன்ற   சுமைகள்   மேலும்   மேலும்  அழுத்துவதால்,   ஸம்சாரக்   கடலில்  இன்னும்  ஆழ  மூழ்குகின்றனர்...!    உலக   விஷயங்கள்   என்ற   நீர்ச்   சுழலினால்    இவர்கள்   மேலும்   அலைக் கழிக்கப்  படுகின்றனர்...!   படகு  இல்லாமல்   இந்த   பயங்கரமான   கடலில்  அகப்பட்டுக்   கொண்டிருக்கும்   இவர்கள்,   கரை   சேர   முடியாமல்  தவிக்கின்றனர்,  தத்தளிக்கின்றனர்...!   இவர்களுக்கு  பகவான்  ஸ்ரீ  விஷ்ணுவே   படகாக  ( ஓடமாக )   இருந்து   கரையேற்றுகிறார்...!  



( பகவான்  ஸ்ரீ  கிருஷ்ணர்  'பகவத் கீதை'யில்  (2.38)  
"ஸுக துக்கே ஸமே க்ருத்வா லாபா லாபௌ ஜெயா ஜயௌ" என்று கூறுகிறார்.. 
அதாவது,
 "சுகம்  துக்கம்;  லாபம்  நஷ்டம்;  வெற்றி  தோல்வி;  ஆகியவற்றை சமமாகக்  கொள்ள  வேண்டும்"  என்கிறார். 


மேற்குறிப்பிட்ட  இரட்டைகளை 
(சுகம்  துக்கம்;  லாபம்  நஷ்டம்;  வெற்றி  தோல்வி)  எதிர்  கொள்ளாதவர்  இந்த  உலகத்தில்  இல்லை...!   'இன்பம்'  என்ற  ஒன்று  இருந்தால்,  'துன்பம்'  நிச்சயம்  உண்டு...!   யாரும்  துன்பத்தை விரும்புவதில்லை...!  இன்பத்தையே  நாடுகின்றனர்...!   இறைவனின் திருவடிகளில்  தஞ்சம்  அடைய விரும்புபவன்,  இவை  இரண்டையும்  சமமாகக்  கருத வேண்டும்...!  இன்பங்களில்  நாட்டமும்  கூடாது;  அதுபோல,  துன்பத்தைக்  கண்டும்  ஓடவும்  கூடாது...!   நமக்கு  வாழ்க்கையில்  என்ன  கிடைக்கிறதோ,  அவற்றை  அப்படியே  ஏற்றுக் கொள்ள  வேண்டும்.  இப்படி  எவன்  வாழ்கிறானோ,  அவனே  முக்தி  அடையத்  தகுதி  பெற்றவன். 

இவ்வாறு  வாழ்வது  என்பது,  மேலோட்டமாகப்  பார்த்தால்  சுலபமாகத்  தெரியலாம்...!  பலர்  இவ்வாறு  கூறவும்  கேட்டிருப்போம்...!   அனால்,  இது அவ்வளவு  சுலபமன்று...!  இன்பங்களினால்  மகிழாமலும்,  துன்பங்களினால் துவளாமலும்  இருப்பது  என்பது  மிகவும்  பக்குவப்பட்ட  உயர்ந்த  நிலை...!  இது,  யாரோ  சிலருக்குத்  தான்  வாய்க்கிறது...! 

ஸ்ரீ  ராமானுஜர்  தன்  பகவத்  கீதை  உரையான  'ஸ்ரீ  பாஷ்ய'த்தில், 
"தேஹா  திரிக்தம்  அஸ்ப்ருஷ்ட்ட  ஸமஸ்த  தேக  ஸ்வபாவம்  நித்யம்  ஆத்மானம்  ஜ்ஞாத்வா.."  என்று  இதை  விளக்குகிறார். 

"எவன்  ஒருவன்  'தன்னில்  
நிலை'  பெற்றிருக்கிறானோ  (அதாவது  தான்  வெறும்  உடம்பு  அல்ல,  தான்  ஒரு  ஆத்மா  என்று உணர்வது);  மற்றும்,  இறைவனிடத்திலும்  நிலை  பெற்றிருக்கிறானோ  (அதாவது,  தன்னை   இறைவனிடத்தில்  ஒப்படைத்து,  சரணாகதனாக  வாழ்வது)".  

அவனால்  மட்டுமே  
சுகம்  துக்கம்;  லாபம்  நஷ்டம்;  வெற்றி  தோல்வி;  ஆகியவற்றை  சமமாகக்  கொள்ள  முடியும்...! அவன்  அன்றாட செயல்களையும்,  கடமைகளையும்  பகவானிடத்தில்  அர்ப்பணித்து  விடுகிறான்;  பகவானுக்காகவே  செய்கிறான்;  பகவானின்  அருளை  எண்ணியே  அவன்  வாழ்வானது  கழிகிறது...!  அவனுடைய  வாழ்வு  'யோக வாழ்வாக'  அமைகிறது...!  இறைவனுக்காக  செய்யப்படுகின்ற  ஒன்று  'யோகம்'  எனப்படுகிறது.

Saturday, March 10, 2012

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த 

//   ஸ்ரீ முகுந்த மாலா   //

ஸ்லோகம் - 11 
 
மாபீர்  மந்த  மநோ  விசிந்தய  பஹுதா யாமீஸ்சிரம்  யாதநா:
நாமீ     ந     ப்ரபவந்தி    பாபரிபவ:    ஸ்வாமீ      நநு     ஸ்ரீதர:      /
ஆலஸ்யம்  வ்யபநீய  பக்தி  ஸுலபம் த்யாயஸ்வ நாராயணம்
லோகஸ்ய வ்யஸநாபநோதநகரோ தாஸஸ்ய கிம்  ந க்ஷம: // 
 
ஹே  மூட  மனமே...! 
நீ   தேவையில்லாமல்,   நரகத்தில்   யமனுடைய   பல   விதமான தண்டனைகளையும்,  துக்கங்களையும்   நினைத்து   நினைத்து  ஒருநாளும்    பயப்பட   வேண்டாம்...!   பாவம்   செய்த   பாவிகள்   மட்டுமே   இவற்றைக்   கண்டு   பயப்பட   வேண்டும்...!   அவை  நம்மை  ஒன்றும்  செய்ய  முடியாது...!  ஏனெனில்,   நமக்கு  அந்த   லக்ஷ்மி காந்தனான   'ஸ்ரீ தரனே'   மேலான  இறைவன்...!    எனவே,  சோம்பலை  விட்டு  விட்டு,   பக்தியின்  முலமாக,   மிக  எளிதில்   நம்  வசப்படக்  கூடியவனான,  ஸ்ரீமந்   நாராயணனை  த்யானிப்பாயாக...!   இவ்வுலகத்திலுள்ள   அனைவரின்   துன்பங்களையும்  துடைக்கின்றவன்   அந்த   எம்பெருமான்...!   அவ்வளவு   சக்தியுடையவன்   தன்னுடைய   ஒரு   பக்தனின்  துயரைத்   தீர்க்க  வல்லமை  இல்லாதவனா...?

( இங்கு   குலசேகரர்   'ஸ்ரீதரன்'   என்ற   நாமத்தைப்   பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது...!   பெருமாளின்  திருமார்பில்  நித்ய  வாஸம்  செய்பவளான  மகாலக்ஷ்மியே  'ஸ்ரீ'  என்று  அழைக்கப்படுகிறாள்..  திருமகளே  அனைத்து  உயிர்களுக்கும்  தாயாகவும்,  அந்த  நாராயணனே  தந்தையாகவும்  உள்ளனர்..  அந்த  'ஸ்ரீ'- யை  தன்  மார்பில்  தாங்கியுள்ள  ஸ்ரீதரனை   நாம்   சரணமடையும்போது   நம்   அன்னையாகிய   'ஸ்ரீ'-ன்  கருணா  கடாக்ஷமானது   நம்   மீது   படுவதால்,   நம்   பாவங்கள்  அனைத்தும்  நீங்குகின்றன..  


 
'ஆலஸ்யம்  வ்யபநீய  பக்தி  ஸுலபம்',   என்ற  வரி   'சோம்பலை  விட்டு  விட்டு, பக்தியின்  முலமாக,   மிக  எளிதில்  நம்  வசப்படக்  கூடியவனான', என  பொருள்  படுகிறது..   நாராயணன்  அவ்வளவு  எளிதில்  அடையப்படக்  கூடியவனா..? என்றால்,  அதற்கு  பதில்  'ஆம்'  என்பதே...!   அவன்  பக்திக்குக் கட்டுப்பட்டவன்...!    ஸ்ரீமத்  பாகவதத்தில்,   'அம்பரீஷ  சரித்திரத்தில்'  நாராயணனே  தன்னை  'அஹம் பாக்த பராதீன'  அதாவது,   'நான்  என்  அடியார்களுக்குக்  கட்டுண்டவன்'   என   திருவாய்   மலர்ந்தருள்கிறார்...!  நாம்  செய்ய  வேண்டியது  எல்லாம்  ஒன்றே;  சோம்பலை  அறவே  நீக்கி,  உற்சாகத்துடன்  பகவானை  பக்தியுடன்  போற்றி  வணங்க  வேண்டும்.. சோம்பலே  நாம்  செய்ய  வேண்டிய  அனைத்து  காரியங்களுக்கும்  முட்டுக்கட்டையாக  இருக்கிறது..  எனவே,  தெளிந்த  மனத்துடன்   இறைவனை  த்யானிக்க  வேண்டும்..  'த்யாயஸ்வ  நாராயணம்'  என்றதன் மூலமாக  'எங்கும்   நிறைந்தும்,   நம்முள்   அந்தர்யாமியாகவும்   விளங்கும்  நாராயணனை  த்யானிக்க  வேண்டும்'  என்று  கூறுகிறார்  குலசேகரர். )
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 10 

ஸரஸிஜ  நயநே ஸ ஸங்க  சக்ரே 
முரபிதி  மா  விரமஸ்வ  சித்த  ரந்தும்     /
ஸுகதரம   பரம்    ந    ஜாது    ஜாநே 
ஹரிசரண ஸ்மரணாம்ருதேந துல்யம் //  





ஹே மனமே...!    மலர்ந்த   தாமரை   போன்ற   கண்களை   உடையவனும்,  சங்கு  சக்கரங்களைத்   தன்   திருக் கைகளில்    ஏந்தியுள்ளவனும்,   முரன்  என்ற   அசுரனை   அழித்தவனுமான,   அந்த   முராரியை   எப்பொழுதும்  நினைத்துக்   கொண்டே   இருப்பாயாக..!      அந்த    ஹரியினுடைய  திருவடிகளை   த்யானிப்பது   என்பது,  அமுதத்திற்கு  ஒப்பானது...!    இந்த  மேலான   சுகத்திற்கு   சமமானதாகவோ   அல்லது    உயந்ததாகவோ  இவ்வுலகத்தில்   வேறு   எதுவும்   இருப்பதாக   நான்   அறியவில்லை...!


( எவன்   ஒருவன்   தன்   மனத்தால்   இறைவனை   அனுதினமும் வணங்குகிறானோ,  அவனுடைய   பாவங்களும்   களையப்படுகின்றன..! அதனால்  தான்  அனைத்து  ஆழ்வார்களும்  தன்  பாடல்களில்  இறைவனை உள்ளத்தால்  துதி  செய்யும்படி  கூறியுள்ளனர் . 

ஆண்டாள்  தன்  திருப்பாவையில்  'வாயினால்  பாடி,  மனத்தினால்  சிந்திக்க' என்று  பாடுகிறாள்.   நம்மாழ்வார்  தன்  திருவாய்  மொழிப்  பாசுரத்தில் 'அவன்  துயரறு  சுடரடி  தொழு  தெழு  என்  மனனே'  என்று  பாடிப் பரவுகின்றார். 

நாரத பஞ்சராத்திரம்,  
 
"அந்தர் பஹிர் யதி ஹரிஸ் தபஸா தத: கிம் 
நாந்தர் பஹிர் 
யதி ஹரிஸ் தபஸா தத: கிம்", என்று கூறுகிறது.

அதாவது,  "மனதிலும்  வெளியிலும்  ஹரியைக் கண்டால்  தவம்  எதற்கு..? 
உள்ளும்  புறமும்  ஹரியைக்  காணாவிட்டால்  தவத்தால்  யாது  பயன்..? " )
ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த 


//   ஸ்ரீ முகுந்த மாலா   //


ஸ்லோகம் - 9  

கர   சரண   ஸரோஜே    காந்தி    மந்   நேத்ர   மீனே  
ஸ்ரமமுஷி புஜவீசி வ்யாகுலே அகாத மார்கே /
ஹரி  ஸரஸி  விகாஹ்ய ஆபீய  தேஜோஜலௌகம்
பவ  மரு   பரிகிந்ந   கேத   மத்ய   த்யஜாமி      // 
 
'ஹரி'   என்னும்   தடாகத்தில்,   பகவானுடைய   திருக்  கைகளும், திருவடிகளும்   தாமரை   மலர்களாக   பூத்துள்ளன...!    அவனுடைய காந்தியுடைய   திருக் கண்களே   மீன்களாக   நீந்தி  விளையாடுகின்றன...!   அவனுடைய   உயர்ந்த   தோள்களே   அத்  தடாகத்தில்   எழும்   அலைகளாக  ஆர்ப்பரிக்கின்றன...!   அவனுடைய   திருமேனி   ஒளியே   அக்குளத்தின் ஜலம்...!    பிறப்பு,  இறப்பு   என்ற   ஸம்சாரமாகிய,   பயங்கரமாக  சுட்டெரிக்கும்  பாலைவனத்தில்  அலைந்து  திரிந்த  நான்,  இந்த   'ஹரி'யாகிய  திருக்  குளத்தில்   நன்கு   மூழ்கி,  பகவானின்   திவ்ய  மேனியின்   ஒளியாகிய   குளிர்ந்த   ஜலத்தை   நன்கு   அருந்தி,   எனது   தாகத்தைப்   போக்கிக் கொள்கிறேன்...!

(கண்ணனையே   இங்கு   அழகான   பொய்கையாக   உருவகப்   படுத்திப் பாடியிருக்கிறார்  குலசேகரர்.  சுட்டெரிக்கும்  வெய்யிலின்  வெம்மையால் ஏற்படும்   தாகத்தைக்   குளிர்ந்த   நீரானது   எவ்வாறு   போக்குமா,   அது போலவே,  ஜனன   மரணம்   என்ற   பயங்கரமான   பாலைவனத்தில்,  
திக்கு   தெரியாமல்   அலைகின்ற   நம்மைப்   போன்ற   மனிதர்களுக்கு  இறைவனே   குளிர்ந்த   நீராக   இருந்து   நம்   வாட்டத்தைப்   போக்குகிறான்.  

நாம்  பூர்வ  ஜன்மங்களில்  சேர்த்து  வைத்துள்ள  பாவ  புண்ணியங்களைத் தொலைப்பதற்கு  இவ்வுலகில்  பிறப்பெடுத்தாலும்,  மீண்டும்  மீண்டும் அவற்றை  சேர்த்துக்  கொண்டேயிருக்கிறோம்.  இவ்வாறு,  முடிவில்லா  ஜன்மங்களை  எடுத்துக்கொண்டே  இருக்கிறோம்.  நாம்,  இந்த  உலகத்தில் பிறந்து,  அறியாமை  என்ற  இருளில்  அகப்பட்டு,  சிற்றின்பங்களிலும்,  போகப்  பொருட்களின்  மீதும்  மனத்தை  வைத்து,  அவை  தரும்  சுகமே  மேலானது  என்று  கருதி,  நம்மை  படைத்த  தந்தையாகிய,  ஜகத் காரண  பூதானாக  விளங்கும்,  பகவானை  மறந்து  விடுகிறோம்.  அவ்வாறு  அல்லாமல்,  இறைவனை  எப்பொழுதும்,  உடலாலும்,  மனதாலும்  போற்றி வணங்க  வேண்டும்.  

"சேற்றில்  வாழும்  ஒருவகை  மீன்,  சேற்றுக்குள்ளேயே  இருந்தாலும்,  அதன்  மீது  சேறு  ஒட்டிக் கொள்வதில்லை.  அது  போலவே,  ஒரு  பக்தன்  இந்த  உலகத்தில்  வாழ்ந்தாலும்,  அஞ்ஞானமாகிய   நிழல்  அவன்  மீது  விழுவதில்லை",  என்று  ஸ்ரீ  ராமகிருஷ்ணர்  கூறியுள்ளதை  நாம் மனதில்  கொள்ள  வேண்டும்.) 

Friday, March 9, 2012


ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 8


சிந்தயாமி ஹரிமேவ ஸந்ததம்
மந்த மந்த ஹஸிதாநநாம்புஜம் /
நந்த கோப தனயம் பராத்பரம்
நாரதாதி முனிப்ருந்த வந்திதம் //


நான் மனதில் எப்பொழுதும் பகவான் ஹரியையே தியானிக்கிறேன்...!

அவன் புன்முறுவல் பூக்கும் தாமரையைப் போன்ற திரு முகத்தையுடையவன்...!

அவனே நந்த கோபரின் குழந்தையாகத் திரு ஆயர்பாடியில் தோன்றியவன்...!

தேவ ரிஷியான நாரதர் போன்ற முனிவர்கள் போற்றி வணங்கும் பரம் பொருளாக விளங்குபவன்...!


(இறைவன் கற்பனைக்கு எட்டாத பரம்பொருளாக இருப்பவன். அந்தப் பரம்பொருளே, தன் பக்தனின் பக்திக்கு வசப்பட்டு, கருணையுடன் கூடிய, அழகிய ரூபம் தாங்கி, நாம் எந்த வடிவத்தில் அவனை வணங்குகிறோமோ, அதே கோலத்தில் நமக்கு காட்சியளிக்கிறான்.

அருவமாக, ஸர்வ வ்யாபியான, அந்த பரஜ்ஜோதி ஸ்வரூபனை தியானிப்பது அவ்வளவு எளிதானது அல்ல..! அனால், இறைவனை உருவக் கடவுளாக, நம் மனதிற்கு இஷ்டமான வடிவத்தில் தியானிப்பது சுலபம்..! குலசேகரர், இங்கு தியானிப்பது யசோதைக்கும், நந்த கோபருக்கும் குழந்தையாகத் தோன்றி, பரமானந்தத்தைத் தந்தவனான பகவான் ஸ்ரீ கிருஷ்ணனையே..! அவனே, நாரதர் போன்ற மகா முனிவர்கள் துதிக்கும் பரம்பொருள்...!)

ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச்செய்த

// ஸ்ரீ முகுந்த மாலா //


ஸ்லோகம் - 7

க்ருஷ்ண த்வதீய பத பங்கஜ பஞ்ஜராந்தம்
அத்யைவ மே விஸது மானஸ ராஜ ஹம்ஸ: /
ப்ராணப் ப்ரயாண ஸமயே கப வாத பித்தை:
கண்டா வரோதந விதௌ ஸ்மரணம் குதஸ் தே //


ஹே கிருஷ்ணா...! இப்பொழுதே என்னுடைய மனமாகிய ராஜ ஹம்சம் (அன்னப் பறவை) உன் திருவடித் தாமரைகளாகிய கூண்டில் புகுந்து (தஞ்சம் அடைந்து) கொள்ளட்டும். கபம், வாதம், பித்தம் போன்ற தோஷங்களால் ஏற்படும் (உடல் தளர்ச்சி, நினைவு தடுமாறுதல் ) உபாதைகளால் குரல் தடுமாறக் கூடிய மரண காலத்தில் (பிராணன் இவ்வுடலை விட்டு வெளியேறும் போது) உன்னை நான் எவ்வாறு நினைக்க முடியும்...?


(மனமும், உடலும் நல்ல நிலையில் உள்ள போதே, அதாவது இளமையிலேயே, பகவானுடைய சேவையில் அவற்றை ஈடு படுத்த முயல வேண்டும்.

'மனம் ஒரு குரங்கு' - மனமானது சதா அலை பாயும் தன்மையுடையது. அதனை அதன் போக்கில் விடாமல், கட்டுக்குள் வைக்க பழகிக் கொண்டால், இவ்வுலகில் எது உண்மை..? எது பொய்மை..? எது நிலையானது..? எது நிலையற்றது..? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும். மனத்தை இளமையிலேயே அடக்கப் பழகாவிட்டால், அதை என்றுமே கட்டுக்குள் கொண்டு வர முடியாது.

மனித உடலானது பஞ்ச பூதங்களின் சேர்க்கையினால் ஆனது.
கபம் (நீர் + நிலம்) , வாதம் (காற்று + ஆகாயம்) , பித்தம் (நெருப்பு + நீர்) போன்றவைகளின் முறையற்ற கலவையே நோய்களுக்கு மூல காரணமாகின்றன. வயது ஏற ஏற, உடலில் நோய்களின் ஆதிக்கமும் அதிகமாகின்றது. )